தீபாவளி போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் சிஐடியு ஆர்ப்பாட்டம்!

தீபாவளி போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் சிஐடியு ஆர்ப்பாட்டம்!

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.5,000 தீபாவளி போனஸ் வழங்க வேண்டும், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு (CITU) தூத்துக்குடி மாவட்டக் குழு சார்பில் திங்கள்கிழமை (26.10.2026) கோரம்பள்ளம் தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு நலவாரியத் திட்டங்களைச் சீர்குலைக்கும் புதிய சட்டத் தொகுப்புகளைக் கைவிட வேண்டும் என்றும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 1 சதவீதமான ரூ.3.3 லட்சம் கோடியை அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்திற்கு ஒதுக்கி, தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், தமிழக அரசு அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் ரூ.5,000 தீபாவளி போனஸ் வழங்க வேண்டும், முத்தரப்புக் குழு அமைத்து நலவாரியங்களை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும், ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை கல்வி நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

60 வயது நிறைவடைந்த தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும், பெண்களுக்கு 55 வயது முதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.25,000 திருமண நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதேபோல், சொந்த வீடு இல்லாத தொழிலாளர்களுக்கு இலவச வீடு வழங்க வேண்டும், நிலம் உள்ளவர்களுக்கு வீடு கட்ட ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாதாந்திர கண்காணிப்புக் குழுக் கூட்டங்களை முறையாக நடத்த வேண்டும், அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை பெறும் வகையில் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் ஆர். கிருஷ்ணவேணி தலைமை தாங்கினார். உப்புச் சங்கம் ஐ. பாஸ்கர், தையல் சங்கம் பி. தங்கராஜ், பொதுத் தொழிலாளர் சங்கம் பி. பெருமாள், மருத்துவர் எஸ். நாகராஜ், சாலையோரத் தொழிலாளர் சங்கம் டி. ஜான்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் எம். முருகன் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தார். நிறைவில் சிஐடியு மாவட்டத் தலைவர் இரா. பேச்சிமுத்து உரையாற்றினார்.

சிஐடியு மாவட்ட நிர்வாகிகளான கே. காசி, ஏ. ரவிதாகூர், வை. பாலசுப்பிரமணியம், எஸ். கணபதி சுரேஷ், கே. சங்கரன், எம். ராமையா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.