தூத்துக்குடியில் காலாவதியான இனிப்பு விற்பனை செய்த பேக்கரிக்கு சீல் வைப்பு..!

தூத்துக்குடியில் காலாவதியான இனிப்பு விற்பனை செய்த பேக்கரிக்கு சீல் வைப்பு..!

தூத்துக்குடியில் சுகாதார குறைபாடுகளுடன் இயங்கிய பேக்கரியின் உணவு பாதுகாப்பு உரிமத்தினை தற்காலிக ரத்து செய்து, அதன் இயக்கம் நிறுத்தம். மேலும், காலாவதியான 3 கிலோ தேங்காய் துருவலும், அதில் தயாரிக்கப்பட்ட 3 கிலோ கேக்கும் பறிமுதல் - நியமன அலுவலர் நடவடிக்கை.

சுகாதாரத் துறை செயலாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப, உணவு பாதுகாப்பு ஆணையர் திரு.லால்வேணா, இ.ஆ.ப மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கோ.லட்சுமிபதி, இ.ஆ.ப ஆகியோரது கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதலின் பேரில் தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் டாக்டர்.ச.மாரியப்பன், தூத்துக்குடி மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட முத்தையாபுரத்தில் உள்ள திரு.ராஜன் என்பவருக்குச் சொந்தமான மேனகா பேக்கரி மற்றும் ஸ்வீட்ஸ் நிறுவனத்தினை புகார் ஒன்றின் அடிப்படையில் இன்று (03.04.2024) ஆய்வு செய்தார்.

அப்போது, அந்த பேக்கரியின் தயாரிப்புக்கூடமானது மிகவும் சுகாதாரக்கேடுடனும், அதிக ஈக்கள் தொல்லையுடனும், உரிய கணக்குக்கள், பயிற்சி விபரங்கள் மற்றும் பகுப்பாய்வறிக்கைகள் ஏதுமில்லாமலும், அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததும், சமையல் எண்ணெய் பயன்பாடு குறித்தான விபரங்கள் இல்லாததும் கண்டறியப்பட்டது. மேலும், காலாவதியான தேங்காய் துருவல் 3 கிலோவும், அதிலிருந்து தயாரிக்கப்பட்ட கேக் மற்றும் பிஸ்கட் 3 கிலோவும், தப்புக்குறியீடுடன் பொட்டலமிடப்பட்ட சுமார் 10 கிலோ ரஸ்க், ஓயின் பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்கள் கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மிகுந்த சுகாதாரக் குறைபாடுடன் பேக்கரியின் தயாரிப்புக்கூடம் இருந்ததினால், பொதுமக்களின் பொதுசுகாதார நலனை கருத்தில்கொண்டு, அந்நிறுவனத்தின் உணவு பாதுகாப்பு உரிமத்தினை இடைக்காலமாக தற்காலிக ரத்து செய்வதாகவும், அதனால் அந்நிறுவனத்தின் இயக்கத்தினை உடனடியாக நிறுத்திவைக்கவும் நியமன அலுவலர் உத்திரவிட்டுள்ளார்.

பேக்கரி உரிமையாளர்களின் கவனத்திற்கு:

1. பேக்கரி மிகவும் சுகாதாரமானதாக இருக்க வேண்டும்.

2. தயாரிப்பு பணி முடிந்து, உணவுப் பொருட்களைப் பொட்டலமிட்டவுடன், அதன் தயாரிப்பு தேதியுடன் கூடிய லேபிள் விபரங்கள் முழுமையாக அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.

3. ⁠பொருள் வைப்பறை மிகவும் சுகாதாரமானதாக, கொறிப்பான்கள் மற்றும் பூச்சிகள் தாக்கம் ஏதுமின்றி இருக்க வேண்டும்.

4. ⁠பணியாளர்கள் அனைவருக்கும் வருடாந்திர மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்.

5. ⁠மூல உணவுப் பொருட்கள் மற்றும் தயாரித்த உணவுப் பொருட்களின் கணக்கு விபரத்தினை, நிறுவனத்தினுள் தான் பராமரிக்க வேண்டும்.

6. ⁠ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தாமல், பயோ-டீசல் தயாரிக்க அனுப்பிடுதல் வேண்டும்.

7. ⁠உணவுப் பொருட்களில் நேரடியாகப்படும் வகையில் அச்சிட்ட காகிதங்களை பொட்டலமிடவோ, விநியோகிக்கவோ, காட்சிபடுத்தவோ அல்லது மூடிவைக்கவோ பயன்படுத்தக்கூடாது.

விதிமுறைகளைப் பின்பற்றாத பேக்கரிகளின் உணவு பாதுகாப்பு உரிமம் உடனடியாக இடைக்கால ரத்து செய்யப்பட்டு, அவற்றின் இயக்கம் உடனடியாக நிறுத்தப்படும் என்று எச்சரிக்கப்படுகின்றது. பொதுமக்களின் பொது சுகாதார நலன் சார்ந்த விடயத்தில் எவ்வித சமரசமும் கிடையாது என்றும் திட்டவட்டமாக அறிவிக்கப்படுகின்றது.

மேலும், இது தொடர்பான புகார்கள் ஏதும் நுகர்வோருக்கு இருப்பின், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலகக் கட்செவி எண்ணிற்கோ அல்லது உணவு பாதுகாப்புத் துறையின் TN Food Safety என்ற புகார் செயலி மூலமாகவோ அல்லது https://foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரது ரகசியங்கள் காக்கப்படும்.