வேலூர் அருகே கிணற்றில் மூழ்கி தாய், 2 குழந்தைகள் உயிரிழப்பு.. நீச்சல் பயிற்சியில் விபரீதமா?
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே கிணற்றில் மூழ்கி தாய் மற்றும் அவரது 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.
நீச்சல் பழகி கொடுக்கும்போது விபரீதம் நடந்ததா அல்லது குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டாரா என்று விசாரித்து வருகிறார்கள். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூரை அடுத்த பிச்சாநத்தம் கிராமத்தை சேர்ந்த 40 வயதாகும் சுரேஷ்க்கும், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த நாராயணிபுரம் கிராமத்தை சேர்ந்த 30 வயதாகும் பவித்ரா என்ற பெண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணம் நடந்தது.
சுரேஷ். திருமணத்துக்கு பின்னர் அவர் மனைவி பவித்ராவுடன் சென்னை மயிலாப்பூரில் வாடகை வீட்டில் குடியேறி வசித்து வந்தார். இவர்களுக்கு 9வயதில் ரித்திக் என்ற மகனும், ரித்திகாஸ்ரீ 7வயது மகள் ஆகியோர் இருந்தனர். சுரேஷ் சென்னையில் உள்ள ஜவுளிக்கடையில் கேஷியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி சொந்த ஊரான பிச்சாநத்தம் கிராமத்துக்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் சுரேஷ் திரும்பினர்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு சுரேஷ் வேலூரில் உள்ள ஓட்டலில் கேஷியராக வேலைக்கு சேர்ந்தார். மேலும் தனது 2 குழந்தைகளையும் பள்ளியில் சேர்ப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை 9 மணியளவில் பவித்ரா தனது 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு விவசாய நிலத்திற்கு சென்றுவருவதாக கணவரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர்கள் வீட்டிற்கு திரும்ப வரவில்லை. அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த சிலர் சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் வந்து உங்களது குழந்தை கிணற்றில் பிணமாக கிடப்பதாக கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சுரேஷ் குடும்பத்தினர் பதறியடித்துக் கொண்டு கிணற்றுக்கு வந்து பார்த்தார்து ரித்திகாஸ்ரீயின் உடல் மிதந்தது.
இதுகுறித்து, வேப்பங்குப்பம் போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் சசிதரன் (பொறுப்பு) தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்தனர்.
பின்னர், தீயணைப்பு வீரர்கள் முதலில் கிணற்றில் பிணமாக கிடந்த ரித்திகாஸ்ரீயின் உடலை மீட்டனர். அதன்பின்னர் தண்ணீருக்கு அடியில் மற்ற 2 பேரும் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வீரர்கள் கிணற்றில் மூழ்கி தேடி பார்த்தார்கள். சுமார் அரை மணி நேரம் தேடுதலுக்கு பிறகு பவித்ரா மற்றும் ரித்திக்கை அவர்கள் பிணமாக மீட்டனர்.
பின்னர், உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த மரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்த போது, 3 பேரும் பிணமாக கிடந்தது தரைமட்ட கிணறு என்பதால் அந்த கிணற்றில் எளிதாக யாரும் இறங்க முடியாது. எனவே பவித்ரா குடும்ப பிரச்சினை காரணமாக தனது 2 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி கொலை செய்து விட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்..
அதேநேரம் நீச்சல் பழகி கொடுக்கும்போது விபரீதம் நடந்ததா அல்லது தவறி விழுந்து இறந்தனா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. சென்னையிலிருந்து திரும்பிய சில நாட்களிலேயே இளம் பெண் 2 குழந்தைகளுடன் கிணற்றில் மூழ்கி இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.