Shimjitha Musthafa: யூட்யூபர் டூ பஞ்சாயத்து உறுப்பினர்.. கேரளாவே தேடும் பின்னனி..!

Shimjitha Musthafa: யூட்யூபர் டூ பஞ்சாயத்து உறுப்பினர்.. கேரளாவே தேடும் பின்னனி..!

கேரளாவில் பேருந்து பயணத்தில் தன்னை பாலியல் எண்ணத்தோடு தொட்டதாக ஷிம்ஜிதா முஸ்தபா என்ற பெண் வீடியோ வெளியிட்ட நிலையில், அதில் சம்பந்தப்பட்ட நபரான தீபக் என்பவர் கடும் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சம்பவம் கேரளா மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு உறுதியளித்துள்ளது. இந்த நிலையில் ஷிம்ஜிதா முஸ்தபா குறித்து பல திடுக்கிடும் தகவல்க வெளியாகியுள்ளது. ஷிம்ஜிதா முஸ்தபா இந்த விவகாரம் பெரிதான நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது சமூக வலைத்தள கணக்குகளை நீக்கினார்.

விளக்க வீடியோவிலும் குற்றச்சாட்டு

அவர் கடைசியாக வெளியிட்ட வீடியோவில், தீபக் தன்னிடம் நடந்து கொண்டது தற்செயலாகத் தொடுதல் அல்ல என்றும், அது ஒரு தவறான புரிதல் அல்ல என்றும் கூறியுள்ளார். ஒரு மனிதனின் உடலை அனுமதியின்றி தொட யாருக்கு உரிமை உண்டு என்றும், குற்றம் சாட்டப்பட்டவர் தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த இயலாதவர் என்றும் ஷிம்ஜிதா குற்றம் சாட்டினார். சமூகமும் குடும்பமும் இதுபோன்ற விஷயங்களை சம்பந்தப்பட்டவர்களை புரிந்துகொண்டு சரிசெய்ய வேண்டும் எனவும் ஷிம்ஜிதா தெரிவித்திருந்தார்.

ஷிம்ஜிதா முஸ்தபா பின்னணி

மலப்புரத்தைச் சேர்ந்த ஷிம்ஜிதா முஸ்தபா ஒரு சமூக வலைத்தள பிரபலமாவார். கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வடகராவைச் சேர்ந்தவர் ஷிம்ஜிதா. இவர் 16 ஆண்டுகளுக்கு முன் 12ம் வகுப்பு முடித்தவுடன் திருமணம் செய்துக் கொண்டார். அதன்பின்னர் மலப்புரத்தில் உள்ள அரிக்கோட்டில் இருக்கும் வெள்ளேரி பகுதியில் வசித்து வந்தார்.

பொதுவாக திருமணமான இஸ்லாமிய பெண்களுக்கு உயர்கல்வி என்பது எட்டாக்கனியாக இருந்த நிலையில்,ஷிம்ஜிதாவுக்கு அது எட்டியது. அவர், தனது பட்டப்படிப்பை முடித்து, கணவரின் குடும்பத்தின் ஆதரவுடன் வணிகத்தில் முதுகலைப் படிப்பும் முடித்துள்ளார்.

பஞ்சாயத்து உறுப்பினர்

இப்படியான நிலையில் 2020ம் ஆண்டு மலப்புரத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போது அரிக்கோடு கிராம பஞ்சாயத்தின் வெள்ளேரி வார்டில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி பெண் வேட்பாளரை தேடி அலைந்தது. அந்த தேடலில் வேட்பாளராக ஷிம்ஜிதா முஸ்தபா முன்மொழியப்பட்டார். இந்த தேர்தல் அவர் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. உள்ளூர் மக்களிடம் அறிமுகம் இல்லையென்றாலும் நன்கு படித்தவர் என்பதால் அவரை வேட்பாளராக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தேர்வு செய்தது. அவர் அந்த வார்டில் 538 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆச்சரியப்பட வைத்தார்.

முதல் 3 ஆண்டுகள் பஞ்சாயத்து உறுப்பினராக தீவிரமாக பணியாற்றிய ஷிம்ஜிதா, அதன்பின்னர் துபாய் சென்றார். அதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளம் மூலம் தன்னை பிரபலமாக்கி கொண்டார்.

ஷிம்ஜிதா கணவர் துபாயில் பணியாற்றினார். இதற்கிடையில் பஞ்சாயத்து உறுப்பினராக சரியாக பணியாற்றததால் அவரை ராஜினாமா செய்யச் சொல்லி கட்சி தலைமை அறிவுறுத்த கருத்து மோதல் ஏற்பட்டது. உள்ளூர் மக்களும் தனக்கு எதிராக திரும்பிய நிலையில் மீண்டும் முழுநேர பஞ்சாயத்து உறுப்பினர் பணியை கையாண்டார்.

ஷிம்ஜிதா ஆரம்பத்தில் தனது மதத்தை சரியான பின்பற்றி கண்ணியமாக நடந்துக்கொள்வதில் பெயர் பெற்றவராக இருந்துள்ளார். பொதுவெளியில் தலைக்கவசம் இல்லாமல் தோன்ற மாட்டார். ஆனால் துபாய் சென்ற பிறகு ஆளே மாறிவிட்டார். கல்லூரியில் படிக்கும் போது சில விளம்பரத்திலும் ஷிம்ஜிதா நடித்திருக்கிறார். ஆனால் துபாய் பயணம் அவர் சமூக ஊடகத்தில் பிரபலமாக காரணமாக அமைந்தது. இதனால் அவர் தொடர்ந்து அரசியலில் அதிக ஆர்வம் காட்டவில்லை. கட்சி அவரை மீண்டும் தீவிர அரசியலுக்கு கொண்டு வர முயற்சி செய்தும் அவை பலனளிக்கவில்லை.

இந்த நிலையில் தான் தற்போது வீடியோ வெளியிட்டு ஷிம்ஜிதா முஸ்தபா வசமாக சிக்கியுள்ளார். அவரை கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி காவல்துறையினர் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.