காதல் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர், மாமியார், மாமனார் கைது!
காதல் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர், மாமியார், மாமனார் கைது!
கோவையில் காதல் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த மாமியார், மாமனாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மத்துவராயபுரம் பகுதியை சேர்ந்த சஞ்சய்(20) தனது கல்லூரியில் உடன் படித்த ரமணி (20) என்ற பெண்ணை காதலித்து கடந்த மாதம் 6 ஆம் தேதி திருமணம் செய்துக்கொண்டார். பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு இருந்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து, சஞ்சய் வீட்டில், சஞ்சயின் தாய், தந்தையுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், சஞ்சய் கல்லூரியில் உடன் படிக்கும் மற்றொரு பெண்ணிடம் அடிக்கடி செல்போனில் பேசியது தொடர்பாக மனைவி ரமணிக்கு கோபம் ஏற்பட்டு இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில், ரமணியை சஞ்சை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.
கொலையை மறைப்பதற்காக தனது பெற்றோருக்கு போன் செய்ததையடுத்து, இருவரும் வீட்டுக்கு வந்து இறந்துபோன ரமணியின் உடலில் அணிந்திருந்த உடையை அகற்றி சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் பொடியை கரைத்து உடல் முழுவதும் பூசி குளிக்கவைத்து துணிகளை மாற்றிவிட்டு சாணிப்பவுடர் குடித்தது போன்று மற்றவர்களை நம்பவைத்து, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை கூவி அழைத்து புளியைக் கரைத்து ஊற்றியும் பின்பு ஆலாந்துறை தனியார் மருத்துவமனைக்கு ரமணி உடலை தூக்கிச் சென்றுள்ளனர்.
ரமணியின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மருத்துவமனையில் இருந்த ரமணியின் உடலை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக ரமணியின் தந்தை கருப்புசாமி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போலீசார், வருவாய் கோட்டாட்சியர் சஞ்சய் மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.
அதில், சஞ்சய் ரமணியின் கழுத்தை நெறித்து கொலை செய்ததும், அதை மறைப்பதற்காக சஞ்சயும் அவரது பொற்றோரும் சேர்ந்து நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், ரமணியின் கணவர் சஞ்சய், மாமியார் பக்ருநிஷா, மாமனார் லட்சுமணன் ஆகிய 3பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். காதல் திருமணம் செய்த சில நாள்களிலேயே இளம் பெண்ணை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.