கோவில்பட்டியில் அருண் ஐஸ் க்ரீம் கடையில் ஆய்வு... ஆறு வகையான ஐஸ் க்ரீம்களை தூத்துக்குடி மாவட்டத்தில் விற்பனை செய்ய தடை விதிக்க முடிவு..!
கோவில்பட்டியில் அருண் ஐஸ் க்ரீம் கடையில் ஆய்வு. லேபிளில் தப்புக்குறியீடும், தவறான வழிநடத்துதலும் இருந்ததினால், 386 எண்ணிக்கையிலான ஐஸ் க்ரீம்கள் பறிமுதல் - ஆறு வகையான ஐஸ் க்ரீம்களை தூத்துக்குடி மாவட்டத்தில் விற்பனை செய்ய தடை விதிக்க முடிவு - நியமன அலுவலர் நடவடிக்கை.
சுகாதாரத் துறை செயலாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் திரு. லால்வேணா, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கோ.லட்சுமிபதி அவர்களின் வழிகாட்டுதலின்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சிறப்பாக செயல்பட்டுவருகின்றது. அதன் ஒரு அங்காமாக, மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.ச.மாரியப்பன் அவர்களது தலைமையில், கோவில்பட்டி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஜோதிபாஸூ மற்றும் செல்லப்பாண்டி ஆகியோர் அடங்கிய குழுவினர், பசுவந்தனை சாலையில் “ஹேப் டெய்லி” என்ற பெயரில் ஶ்ரீ உமா ஏஜென்ஸி என்ற நிறுவனம் நடத்திவரும் அருண் ஐஸ் க்ரீம் கடையை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் அக்கடையானது, அருணாச்சலம் என்வருக்குச் சொந்தமான ஶ்ரீ உமா ஏஜென்ஸி என்ற நிறுவனத்திற்கு, ஹட்சன் அக்ரோ ப்ராடக்ட் லிட் என்ற நிறுவனத்தால் விநியோகஸ்தர் உரிமை வழங்கப்பட்டு, அந்தக் கடை அமைந்துள்ள கட்டிடத்தை ஹட்சன் அக்ரோ ப்ராடக்ட் லிட் நிறுவனமே வாடகைக்கு எடுத்து, அதனை மறைத்து, ஶ்ரீ உமா ஏஜென்ஸி என்ற நிறுவனம் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்தது போல் ஆவணம் தயாரித்து, உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றது அறியப்பட்டது. இது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் தவறான தகவல் வழங்கிய குற்றமாகும்.
மேலும், அந்தக் கடையில் இருந்த பொருட்களை ஆய்வு செய்த போது, அருண் ஐஸ் க்ரீமின் கஸாட்டா, ரெக்டாங்க்ங்ல் ஸாண்ட்விச், பட்டர்ஸ்காட்ச் கோன், ப்ளாக்கரண்ட் கோன், டபுள் சாக்கோ கோன், யம்மி பீஸ் ஆகிய ஐஸ் க்ரீம் வகைகளில் உணவு எண்ணெய்கள் (பாமாயில்/தேங்காய் எண்ணெய் போன்றவை) பயன்படுத்தி, லேபிளில் குறிப்பட்டிருந்தாலும், அவற்றின் விகிதத்தினை, அந்த ஐஸ் க்ரீம்களின் லேபிளில் குறிப்பிடவில்லை. உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் (உணவுப் பொருட்களின் தரங்கள் மற்றும் உணவுச் சேர்மங்கள்) ஒழுங்குமுறைகளின் படி, ஃப்ரோஷன் டெசர்ட் வகையைச் சார்ந்த மேற்கூறிய வகையிலான உணவுப் பொருட்களில் உள்ள பால் கொழுப்பு மற்றும் உணவு எண்ணெய்/கொழுப்பு ஆகியவற்றின் விகிதத்தினை, நுகர்வோர் அறியும் வகையில் லேபிளில் அச்சிட வேண்டும். இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகமானது, “ஃப்ரோஷன் டெசர்ட்” என்ற பெயரினை லேபிளில் அச்சிடுவதற்கு மட்டுமே கால அவகாசம் வழங்கியுள்ளது. மற்ற லேபிள் விபரங்களை உற்பத்தியாளர்கள் உறுதியாக அச்சிடுதல் வேண்டும். ஆனால், ஆய்வு செய்யப்பட்ட மேற்கூறிய அருண் ஐஸ் க்ரீம் வகைகளில் பால் கொழுப்பு மற்றும் உணவு எண்ணெய் ஆகியவற்றின் விகிதத்தினைக் குறிப்பிடாமல், நுகர்வோர்களுக்குத் தவறான தகவல் வழங்கி, தவறாக வழிநடத்தியுள்ளது. எனவே, 386 எண்ணிக்கையிலான மேற்கூறிய ஐஸ் க்ரீம் வகைகள் பறிமுதல் செய்யப்பட்டு, தொடர் விசாரணைக்காக வணிகர் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், தவறான ஆவணம் சமர்ப்பித்து உரிமம் பெற்றதிற்காகவும், உரிய ஆவணங்கள் இல்லாத்தானாலும், அக்கடையின் உணவு பாதுகாப்பு உரிமத்தினை தற்காலிகமாக இடைக்கால ரத்து செய்து நியமன அலுவலரால் உத்திரவு பிறப்பிக்கப்படவுள்ளது.
மேலும், பொது மக்களை தவறான வழிநடத்துதலிருந்து பாதுகாக்கும் வண்ணம், மேற்கூறிய அருண் ஐஸ் க்ரீம் வகைகளையும் மற்றும் உணவு எண்ணெயை உள்ளீட்டுப் பொருளாகக் கொண்டு, ஆனால், லேபிளில் அதன் விகிதத்தினைக் குறிப்பிடாத மற்ற அனைத்து வகையான அருண் ஐஸ் க்ரீம்களையும் தூத்துக்குடி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் வணிகர்களிடமிருந்து திரும்ப பெற அறிவுறுத்தியும், லேபிளில் உள்ள தவற்றைத் திருத்தும் காலம் வரை, அந்த ஐஸ் க்ரீம் வகைகளை இம்மாவட்டத்தில் விற்பனை செய்ய தடைவிதித்தும், நாளை நியமன அலுவலரால் ஆணை பிறப்பிக்கப்படும். மற்ற நிறுவனத்தின் தயாரிப்புகளையும் ஆய்வு செய்து, இதுபோன்ற ஆணை பிறப்பிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் ஐஸ் க்ரீம்கள் வாங்கும் போது, உணவு எண்ணெய் அதில் உள்ளதாக லேபிளில் குறிப்பிட்டு, அதன் விகிதம் குறிப்பிடப்படாமல் இருப்பதைக் கவனித்தால், அதனை வாங்க வேண்டாம் என்று அறிவிப்பதுடன், அதுகுறித்து, 9444042322 என்ற மாநில வாட்ஸ்அப் புகார் எண்ணிற்கோ அல்லது https://foodsafety.tn.gov.in என்ற இணையளத்தி்ற்கோ அல்லது TN Food Safety என்ற செயலிற்கோ புகார் அளிக்க வேண்டும். புகாரைப் பெற்றவுடன் உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை அளிக்கப்படும். மேலும், புகார் அளிப்பவரது விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. என தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் ச.மாரியப்பன் தெரிவித்துள்ளார்.