சேலம் அரசியல் பிரமுகர் ஏவி ராஜூ மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் கருணாஸ் புகார்
சென்னை: 'என்னைப் பற்றியும், த்ரிஷாவைப் பற்றியும் பல்வேறு உண்மைக்கு மாறான பொய்யான அவதூறு கருத்துகளைக் கூறிய அதிமுக முன்னாள் பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகாரில், 'நான் நடிகராகவும், முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிறுவனராகவும் செயல்பட்டு வருகிறேன். மேலும் நடிகர் சங்கத்தில் துணைத் தலைவராகவும் இருந்து வருகிறேன். இந்தச் சூழ்நிலையில் 19.02.2024 ஏ.வி. ராஜன் என்பவர் தனியார் பத்திரிக்கை பேட்டியில் பல்வேறு பொய்யான தகவலையும், சங்கதிகளையும் என் மீது வன்மம் கொண்டு அவதூறாகவும் அருவருப்பான மற்றும் உண்மைக்கு மாறான செய்தியை பரப்பியுள்ளார்.
மேலும், அதில் நடிகை திரிஷாவையும் தொடர்புபடுத்தி, உண்மைக்கு மாறாக பொய்யான செய்தியை விளம்பரத்துக்காக பேட்டி கொடுத்துள்ளார். அதில் இமி அளவு உண்மை இல்லாத பொழுதும் அந்த வீடியோ பல்வேறு தரப்பினரால் பகிரப்பட்டு தற்பொழுது வைரல் ஆகி உள்ளது. அதனைத் தொடர்ந்து பல யூடியூப் சேனலிலும், என்னை பற்றியும், திரிஷாவைப் பற்றியும் பல்வேறு உண்மைக்கு மாறான பொய்யான அவதூறு கருத்துகளை பரப்பி வருகின்றனர்.
எந்த ஆதாரம் இன்றி கொடுத்த பொய்யான பேட்டியால் என் பெயருக்கும் மற்றும் புகழுக்கும் சமுதாயத்தில் களங்கம் ஏற்படுத்தி உள்ளனர். மேற்படி உண்மைக்கு மாறான பேட்டியின் காரணமாக நான் மிகுந்த மன உளச்சலுக்கு உள்ளாகி உள்ளேன். எனவே, சம்பந்தப்பட்ட நபர் மீதும், யூடியூப் சேனல்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து, வீடியோ பதிவினை நீக்க உத்தரவு பிறப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்' என்று புகாரில் கருணாஸ் கூறியுள்ளார்.
பின்னணி: சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்தவர் ஏ.வி.ராஜூ. இவர் எடப்பாடி பழனிசாமி மீதும், சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இதையடுத்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய ஏ.வி.ராஜூ, கூவத்தூர் சம்பவம் குறித்து சில கருத்துகளை பகிர்ந்தார். அந்தச் சம்பவத்துடன் த்ரிஷாவை தொடர்புபடுத்தி அவர் பேசிய அவதூறு கருத்துகள் சர்ச்சை ஏற்படுத்தின. அவர் பேசிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து திரையுலகைச் சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக, நடிகை த்ரிஷா வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், 'கவனம் பெற எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களையும் கேவலமான மனிதர்களையும் திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பாக உள்ளது. இது தொடர்பாக உரிய, கடுமையான நடவடிக்கை உறுதியாக மேற்கொள்ளப்படும். இனிமேல் சட்டரீதியாகத்தான் எல்லாவற்றையும் சொல்லபோகிறேன்' என்று கொந்தளிப்புடன் பதிவிட்டிருந்தார். கண்டனங்கள் எழுந்த நிலையில் ஏ.வி.ராஜூ தனது பேச்சுக்கு மன்னிப்புக் கோரியது குறிப்பிடத்தக்கது.