உயிரைக் காப்பாற்றுவதா? ரீல்ஸ் எடுப்பதா? – கிணற்றில் விழுந்த இளைஞர்களை வைத்து ‘கண்டென்ட்’ செய்த அதிர்ச்சி சம்பவம்!

உயிரைக் காப்பாற்றுவதா? ரீல்ஸ் எடுப்பதா? – கிணற்றில் விழுந்த இளைஞர்களை வைத்து ‘கண்டென்ட்’ செய்த அதிர்ச்சி சம்பவம்!

“ஹாய் காய்ஸ்… நம்ம ஃப்ரெண்ட் கிணற்றில் தவறி விழுந்துவிட்டார்…” – உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நண்பரைப் பற்றி பதற்றப்பட வேண்டிய நேரத்தில், கேமரா முன்பு இப்படி ஒரு இளைஞர் பேசும் காட்சி சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இளைஞர்கள் சிலர் கிணற்றில் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ஒருவர் எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற முயன்ற மற்றொரு நண்பரும் கிணற்றுக்குள் சிக்கிக் கொண்டதாக தெரிகிறது.

ஆனால், அடுத்ததாக நடந்ததுதான் நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவர் கிணற்றுக்குள் சிக்கியிருக்கும் சூழலில், அவர்களை உடனடியாக காப்பாற்றுவதற்குப் பதிலாக, அங்கு இருந்த இளைஞர்கள் சம்பவத்தை ரீல்ஸ் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

“இருவரையும் காப்பாற்ற எங்களால் முடியவில்லை… தீயணைப்புத் துறையினரை அழைத்துள்ளோம்… அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்” என மிகவும் சாதாரணமாக பேசும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, “தொடர்ந்து இணைப்பில் இருங்கள்… அடுத்த ரீல்ஸில் பார்க்கலாம்” என்ற பாணியில் சம்பவத்தை ஒரு சீரியல் எபிசோடு போல தொடர்ச்சியாக பதிவிட்டிருப்பது பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பின்னர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றுக்குள் சிக்கியிருந்த இருவரையும் மீட்டுள்ளனர்.

அதன்பிறகு, மீட்பு காட்சிகளுக்கே சினிமா பாணியில் பின்னணி இசை சேர்த்து ரீல்ஸ் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக குணா திரைப்படத்தில் இடம்பெறும் இளையராஜாவின் பாடலை பயன்படுத்தி, மீட்பு காட்சியை சினிமா காட்சியைப் போல சித்தரித்துள்ளனர்.

https://x.com/i/status/2089524105783755150

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய இளைஞருடனும் மீண்டும் ரீல்ஸ் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ஒரு உயிருக்கு ஆபத்தான சம்பவம் முழுவதுமே ‘கண்டென்ட்’ ஆக மாற்றப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த வீடியோவை பார்த்த அரசு பள்ளி ஆசிரியர் செல்வம், இளைஞர்களின் இந்த அணுகுமுறையை கடுமையாக கண்டித்துள்ளார்.

“முதலில் ஏதோ விளையாட்டுக்குத்தான் அந்த பையன் சொல்கிறான் என்று நினைத்தேன். ஆனால் வீடியோவை பார்த்து முடிக்கும் போது நிச்சயம் கோபம் வரும். அடப்பாவிகளா… உயிருக்கு போராடும் நண்பனை காப்பாற்றுவதற்கு பதிலாக இதையெல்லாம் ரீல்ஸாக எடுக்கிறீர்களே?” என்ற கருத்தில் அவர் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

ரீல்ஸ் மோகம்… மனிதநேயம் எங்கே?

இன்றைய 2K கிட்ஸ், ஜெனரேஷன் Z இளைஞர்களிடையே ரீல்ஸ் மோகம் அதிகரித்து வருகிறது. சமூக ஊடகங்களில் அதிக லைக்ஸ், வியூஸ், ஃபாலோவர்ஸ் பெற வேண்டும் என்ற போட்டி, சில நேரங்களில் மனிதநேயத்தையே பின்னுக்குத் தள்ளிவிடுகிறதா என்ற கேள்வி எழுகிறது.

ஒரு காலத்தில் ஊடகங்களில் பணியாற்றியவர்கள் செய்தியை செய்தியாக அணுகினர். எதை காட்ட வேண்டும்? எதை காட்டக்கூடாது? பாதிக்கப்பட்டவரின் தனியுரிமையை எப்படி பாதுகாப்பது? போன்ற அடிப்படை ஊடக அறம் முக்கியமாக பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது, “எல்லாமே கண்டென்ட்… எல்லாமே வியூஸ்…” என்ற மனநிலை சமூக வலைதளங்களில் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஒருவரின் ஆபத்து, மற்றொருவருக்கு ‘கண்டென்ட்’ ஆகிவிடும் நிலை உருவாகிவிட்டால், அடுத்த தலைமுறைக்கு நாம் எதை கற்றுக் கொடுக்கிறோம் என்ற கேள்வியும் எழுகிறது.

உயிரைக் காப்பாற்ற வேண்டிய நேரத்தில் கேமராவை ஆன் செய்வதா?

அல்லது கேமராவை கீழே வைத்துவிட்டு மனிதநேயத்துடன் கையை நீட்டுவதா?

இந்த சம்பவம் அந்த கேள்வியை ஒவ்வொருவரின் முன்பும் நிறுத்தியுள்ளது.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நீங்களே அந்த வீடியோவை பார்த்து உங்கள் கருத்தை சொல்லுங்கள்.