குலசை கடற்கரை பூங்காவில் இளைஞர் அடித்துக் கொலை! தந்தை, 2 இளஞ்சிறார்கள் கைது!

குலசை கடற்கரை பூங்காவில் இளைஞர் அடித்துக் கொலை! தந்தை, 2 இளஞ்சிறார்கள் கைது!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அருகே இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தந்தை மற்றும் அவரது இரண்டு இளஞ்சிறார்களைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அருகேயுள்ள கடற்கரை பூங்கா பகுதியில் இளைஞர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பதாகக் குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இறந்து கிடந்தவர் யார்?

போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் உடன்குடி வில்லி குடியிருப்பைச் சேர்ந்த பேச்சிமுத்துவின் மகன் வேல்முருகன் (26) என்பது தெரியவந்தது. அவரது உடலுக்கு அருகே கிடந்த செல்போனை ஆய்வு செய்தபோது, அது தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவன் காலனியைச் சேர்ந்த இசக்கிமுத்துவின் மகன் காளிராஜ் (40) என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது.

செல்போன் மூலம் சிக்கியவர்கள்!

இதையடுத்து, காளிராஜைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, சம்பவத்தன்று இரவு காளிராஜ் தனது இரண்டு மகன்களுடன் குலசேகரன்பட்டினம் கோவிலுக்குச் சென்றபோது, அங்கு வேல்முருகனுக்கும் அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த காளிராஜ் மற்றும் அவரது இரண்டு மகன்களும் சேர்ந்து வேல்முருகனைத் தாக்கியதாகவும், இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த வேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தந்தை, இரண்டு மகன்கள் கைது!

சம்பவத்திற்குப் பிறகு மூவரும் அங்கிருந்து தூத்துக்குடிக்குத் திரும்பியதாகக் கூறப்படுகிறது. பின்னர், தங்களது செல்போன் சம்பவ இடத்திலேயே தவறவிடப்பட்டதை அவர்கள் அறிந்ததாகத் தெரிகிறது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த குலசேகரன்பட்டினம் போலீசார், காளிராஜ் மற்றும் அவரது இரண்டு இளஞ்சிறார்களையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா மற்றும் விரத நிறைவுக் காலகட்டத்தில் நடைபெற்ற இந்தக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.