தூத்துக்குடி அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு: 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல்!

தூத்துக்குடி அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு: 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல்!

தூத்துக்குடி–ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில், வெள்ளப்பட்டி– துப்பாஸ்பட்டி கிராமங்களுக்கு இடையே அரசு மதுபானக் கடை மற்றும் மதுக்கூடம் அமைக்கும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் மூடப்பட்டதாகக் கூறப்படும் மதுபானக் கடைகள், புறநகர்ப் பகுதிகளில் மீண்டும் திறக்கப்படுவதாகவும், இதனால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், துப்பாஸ்பட்டி மற்றும் வெள்ளப்பட்டி கிராமங்களுக்கு இடையே பிரதான சாலையோரத்தில் மதுபானக் கடை மற்றும் மதுக்கூடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் தெரிவித்தனர்.

மதுபானக் கடை அமையவுள்ள பகுதி வழியாகப் பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் செல்ல வேண்டியிருப்பதாகவும், வேலைக்குச் செல்லும் பெண்களும் இந்தப் பகுதியைப் பயன்படுத்துவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். மேலும், மதுக்கடையால் கிராமத்தில் சமூகப் பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனக் கவலை தெரிவித்த அவர்கள், அங்கு மதுபானக் கடை மற்றும் மதுக்கூடம் அமைக்கக் கூடாது என வலியுறுத்தினர்.

இதனால், அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

மதுக்கடைகளை மூடுவதாகக் கூறிவிட்டு, கிராமப்புறங்களுக்கு அருகே புதிய மதுக்கடைகள் அமைக்கப்படுவதாகக் குற்றம்சாட்டிய பெண்கள், இதற்குத் தங்களது கண்டனத்தையும் தெரிவித்தனர்.