எட்டயபுரத்தில் அதிர்ச்சி! பைக் வேகத்தைத் தட்டிக்கேட்டவருக்கு அரிவாள் வெட்டு! 5 சிறுவர்கள் கைது!

எட்டயபுரத்தில் அதிர்ச்சி! பைக் வேகத்தைத் தட்டிக்கேட்டவருக்கு அரிவாள் வெட்டு! 5 சிறுவர்கள் கைது!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வடக்கு ரத வீதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் என்ற சைமன் (54). டிரைவராகப் பணியாற்றி வரும் இவர், நேற்று தனது வீட்டில் உறவினரான கதிரேசன் (50) என்பவருடன் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 5 சிறுவர்கள், கையில் அரிவாள்களுடன் திடீரென வீட்டுக்குள் புகுந்து ஜெயக்குமார் மற்றும் கதிரேசன் ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிவேக பைக் ஓட்டியதை கண்டித்ததால் தாக்குதல்!

இச்சம்பவம் தொடர்பாக எட்டயபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். விசாரணையில், எட்டயபுரம் மற்றும் கோவில்பட்டியைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயதுடைய 5 சிறுவர்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது.

கடந்த மாதம் தலைவரின் குருபூஜை நாளன்று வடக்கு ரத வீதியில் மூன்று சிறுவர்கள் அதிவேகமாக இருசக்கர வாகனங்களை ஓட்டிச் சென்றுள்ளனர். இதனை ஜெயக்குமார் கண்டித்ததால் அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாகவே நேற்று ஜெயக்குமாரைத் தாக்க வந்த சிறுவர்கள், அவரைத் தடுக்க முயன்ற கதிரேசனையும் அரிவாளால் வெட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து 5 சிறுவர்களையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 2 அரிவாள்களைப் பறிமுதல் செய்தனர்.

பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில், வீட்டுக்குள் புகுந்து இருவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் எட்டயபுரம் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.