போப் ஆண்டவரின் டெல்லி பிரதிநிதி 11ம் தேதி தூத்துக்குடி வருகை!
போப் ஆண்டவரின் டெல்லி பிரதிநிதி 11ம் தேதி தூத்துக்குடி வருகை!
பனிமய மாதா சொரூபத்துக்கு தங்க முலாம் பூசும் பணியை துவக்கி வைக்க வருகிற 11ஆம் தேதி போப் ஆண்டவரின் டெல்லி பிரதிநிதி தூத்துக்குடி வருகை தர உள்ளார்.
இது தொடர்பாக தூத்துக்குடி பனிமய அன்னை பேராலயம் மரியாயின் இயக்கம் (Marian Movement) வெளியிட்ட அறிவிப்பு: பரிசுத்த மனிமய தாயின் 16வது தங்க தேரில் பவனி வருவதற்கு ஆயத்தமாக திவ்விய சந்த மரிய தஸ்நேவிஸ் ஆண்டவளின் திருச்சுருபம் பத்திராசனத்தில் இருந்து இறக்கப்பட்டு விசுவாசிகளின் மேலான வணக்கத்திற்காக வரும் 9-ஆம் தேதி வைக்கப்படும்.
நம் ஞான தகப்பன் அர்ச். சவேரியாரால் எழு கடத் துறையின் ஏக அடைக்கல தாயாக சந்தலேனால் கப்பல் மூலமாக ஜூன் மாதம் 9-ஆம் தேதி திருமந்திர நகர் எழுந்தருளிய பரிசுத்த பனிமய மாதாவின் திருச்சுருபம் பாரம்பரிய வழக்கப்படி வரும் 9-ஆம் தேதி பத்திராசனத்தில் இருந்து இறக்கப்பட்டு வரும் 11-ஆம் தேதி வரை விசுவாசிகளின் மேலான வணக்கத்திற்காக வைக்கப்பட்டு பின்னர் தங்க மூலாம் பூசுவதற்காக அடைக்கல அன்னை கன்வியர் மடத்திற்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது.
வரும் 11 ஆம் தேதி பாப்பரசரின் இந்திய தூதர் லெயோபோல்தோ ஜீரெல்லி அவர்கள் நம் நேச ஆண்டவளை தரிசிக்க வருகை தந்து பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்ற இருக்கிறார்கள். எனவே விசுவாசிகள் அனைவரும் மேற்படி நாட்களில் குடும்பமாக வந்து தொடர் ஜெயமாலை செய்வதற்கு உங்களை அன்புடன் அழைக்கின்றோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.