உலக மீன்வள தின விழாவில் அமைச்சரின் 2 மணி நேர தாமதம்... அரை மணி நேரம் காத்திருந்த மாவட்ட ஆட்சியர்... 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த பள்ளி மாணவர்கள்!

உலக மீன்வள தின விழாவில் அமைச்சரின் 2 மணி நேர தாமதம்... அரை மணி நேரம் காத்திருந்த மாவட்ட ஆட்சியர்... 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த பள்ளி மாணவர்கள்!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடைபெற்ற உலக மீன்வள தின விழாவில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் சுமார் 2 மணி நேரம் தாமதமாக வருகை தந்ததால் மாவட்ட ஆட்சியர் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

நவம்பர் 21 உலக மீன்வள தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் சிறப்பு விருந்தினராக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் பங்கேற்று, பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக காலை 10 மணிக்கு விழா தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஒரு மணி நேரம் தாமதமாக வருகை தந்தார். ஆனால் அமைச்சர் குறிப்பிட்ட நேரத்திற்கு வராததால் வெகு நேரம் மாவட்ட ஆட்சியர் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, விழாவில் பங்கேற்பதற்காக அழைத்து வரப்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட நேரம் காத்திருந்தனர். காலை முதலே விழா நடைபெறும் இடத்தில் காத்திருந்த மாணவர்களுக்கு அமைச்சரின் வருகை தாமதமானதால் சிரமம் ஏற்பட்டது.

இறுதியாக, அறிவிக்கப்பட்ட நேரத்தை விட சுமார் 2 மணி நேரம் தாமதமாக அமைச்சர் ஸ்ரீநாத் விழா நடைபெறும் இடத்திற்கு வருகை தந்தார்.

மீனவர்களின் வாழ்வாதாரம், உரிமைகள் மற்றும் நலன்களை முன்னிறுத்திக் கொண்டாடப்படும் உலக மீன்வள தின விழாவில், பள்ளி மாணவர்கள் மற்றும் மாவட்டத்தின் உயர் அதிகாரியான மாவட்ட ஆட்சியரே நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது பொதுமக்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.

அரசு நிகழ்ச்சிகளுக்கு நேரம் தவறாமல் வருவது என்பது வெறும் நடைமுறை சார்ந்த விஷயம் மட்டுமல்ல; பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் நேரத்திற்கு அளிக்கப்படும் மரியாதையும் ஆகும்.

உலக மீன்வள தின விழாவிலேயே நேர மேலாண்மை கேள்விக்குறியானது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.