திருச்செந்தூர் கடற்கரையில் திடீர் காட்சி! கடல் உள்வாங்கியபோது வெளியே தெரிந்த கருப்பசாமி சிலை

திருச்செந்தூர் கடற்கரையில் திடீர் காட்சி! கடல் உள்வாங்கியபோது வெளியே தெரிந்த கருப்பசாமி சிலை

திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே இன்று காலை கடல் சுமார் 50 அடி தூரத்திற்கு உள்வாங்கியபோது, கருப்பசாமி சிலை ஒன்று வெளியே தெரிந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவில் அருகேயுள்ள கடலில் புனித நீராடிவிட்டு சுவாமி தரிசனம் செய்வது பக்தர்களின் முக்கிய வழக்கமாக உள்ளது.

இந்நிலையில்,  காலை கடல் சுமார் 50 அடி தூரம் உள்வாங்கியது. இதனால் கடலுக்குள் இருந்த பச்சை நிற பாசி படிந்த பாறைகள் வெளிப்படையாக தெரிந்தன.

அப்போது கடற்கரை பகுதியில் கருப்பசாமி சிலை ஒன்றும் தென்பட்டது. இதனை பார்த்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் அந்த சிலையை கவனித்தனர். இதுபோன்று கடல் உள்வாங்கும்போது கடற்கரை பகுதியில் பல்வேறு சேதமடைந்த சிலைகள் தென்படுவதாகவும் கூறப்படுகிறது.

பக்தர்களுக்கு காயம் ஏற்படும் அபாயம்

கடலில் நீராடும் இடங்களில் பாறைகள் மற்றும் சேதமடைந்த சிலைகள் இருப்பதால், பக்தர்களின் கால்களில் காயம் ஏற்படும் அபாயம் உள்ளதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, கடற்கரையில் காணப்படும் கருப்பசாமி சிலை உள்ளிட்ட சேதமடைந்த சிலைகள் மற்றும் பக்தர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது, கடற்கரையில் கரை ஒதுங்கும் சிலைகள் உள்ளிட்ட பொருட்கள் தொடர்ந்து அப்புறப்படுத்தப்பட்டு வருவதாகவும், பக்தர்கள் பாதுகாப்புடன் கடலில் புனித நீராடுமாறும் அறிவுறுத்தினர்.

கடல் உள்வாங்கிய நேரத்தில் கருப்பசாமி சிலை வெளியே தெரிந்த காட்சி தற்போது பக்தர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.