கயத்தாறு அருகே கோர விபத்து: பைக் மீது லாரி மோதியதில் தாய், 2 வயது மகள் பலி – கண் எதிரே மனைவி, குழந்தையை இழந்த கணவர்

கயத்தாறு அருகே கோர விபத்து: பைக் மீது லாரி மோதியதில் தாய், 2 வயது மகள் பலி – கண் எதிரே மனைவி, குழந்தையை இழந்த கணவர்

தூத்துக்குடி: கயத்தாறு அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய கோர விபத்தில் தாயும், அவரது 2 வயது பெண் குழந்தையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கண் எதிரே மனைவி மற்றும் குழந்தையை இழந்த கணவரின் நிலை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள வடக்கு சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் மாரிமுத்து (33). இவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி (25). தம்பதியினருக்கு மதுபாலா (2) என்ற பெண் குழந்தை இருந்தது.

மாரிமுத்து தனது சொந்த ஊரில் நடைபெற்ற கோவில் கொடை விழாவில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில், நேற்று இரவு கயத்தாறில் நடைபெற்ற பொருட்காட்சியைப் பார்ப்பதற்காக மனைவி தனலட்சுமி மற்றும் 2 வயது மகள் மதுபாலாவை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார்.

பொருட்காட்சியைப் பார்த்துவிட்டு இரவு சுமார் 10 மணியளவில் மூவரும் மோட்டார் சைக்கிளில் வடக்கு சுப்பிரமணியபுரம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.

பின்னால் வந்த லாரி மோதி கோர விபத்து

கயத்தாறு பஜார் பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தனலட்சுமியும், குழந்தை மதுபாலாவும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். அப்போது லாரியின் சக்கரம் அவர்கள் இருவர் மீதும் ஏறி இறங்கியதாக கூறப்படுகிறது.

இந்த கோர விபத்தில் தனலட்சுமி மற்றும் 2 வயது குழந்தை மதுபாலா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மாரிமுத்து லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

போலீசார் விசாரணை

விபத்து குறித்து தகவல் அறிந்த கயத்தாறு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உயிரிழந்த தாய் மற்றும் குழந்தையின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்பத்துடன் பொருட்காட்சியைப் பார்த்துவிட்டு வீடு திரும்பியபோது நிகழ்ந்த இந்த எதிர்பாராத கோர விபத்தில் தாயும், 2 வயது மகளும் உயிரிழந்த சம்பவம் வடக்கு சுப்பிரமணியபுரம் மற்றும் கயத்தாறு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.