தூத்துக்குடியில் வெவ்வேறு பகுதியில் இரண்டு பேர் தூக்குப்போட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை!
தூத்துக்குடியில் வெவ்வேறு பகுதியில் இரண்டு பேர் தூக்குப்போட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை!
நாசரேத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் ஸ்டேப்லி தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மகன் காளீஸ்வரன். (26) இவர் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. சம்பவத்திற்கு முந்தைய நாள் இரவு காளீஸ்வரன் சாப்பிட்டுவிட்டு தனது அறைக்கு தூங்க சென்றுள்ளார். மறுநாள் காலை 8 மணி ஆகியும் கதவு திறக்காததால் அவரது தாய் சென்று திறந்து பார்த்துள்ளார்.
அப்போது காளீஸ்வரன் மின்விசிசியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து ஜெயக்குமார் நாசரேத் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
தட்டார்மடம் அருகே உள்ள சுகநகரத்தைச் சேர்ந்தவர் சுடலைமணி (வயது 37). இவருக்கு 15 வருடத்துக்கு முன்பு ராஜலட்சுமி என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ராஜலட்சுமி பிரிந்து சென்று விட்டாராம். இதனால் 2-வதாக முத்துராணி என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்த பிறகு அவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தையும், பெற்றோரும் உள்ளனர் என தெரியவந்தது. அதன்பின் அவர், சுடலைமணியிடம் எதுவும் கூறாமல் குழந்தை மற்றும் பெற்றோரை பார்க்க அடிக்கடி சென்றுள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த சுடலைமணி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை வீரலிங்கம், தட்டார்மடம் போலீசில் புகார் செய்தார். புகாரின பேரில் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.