குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: சாதிக்கொடியுடன் வந்த 5 பக்தர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு!

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: சாதிக்கொடியுடன் வந்த 5 பக்தர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு!

தூத்துக்குடி மாவட்டம்: குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில், சாதி அடையாளங்களுடன் கூடிய கொடி, டி-சர்ட், தொப்பி மற்றும் பேனர்கள் கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சாதிக்கொடியுடன் வந்த நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின்போது சாதி அடையாளங்களுடன் கூடிய கொடிகள், டி-சர்ட்கள், தொப்பிகள் மற்றும் பேனர்களைக் கொண்டு வரக்கூடாது என காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த வானுமாமலை மகன் இசக்கி பாண்டி (23), துரை (20), முத்துப்பாண்டி (33), கொம்பையா மகன் வானுமாமலை (47), பூமிநாதன் மகன் இருள்ராஜ் (40) ஆகிய 5 பேர், நேற்று குலசேகரன்பட்டினம் காவல் நிலையம் முன்பாகப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சாலையை மறித்தபடி சாதிக்கொடியுடன் கோயிலை நோக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்துத் தகவலறிந்த சப்-இன்ஸ்பெக்டர் முகேஷ் அரவிந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, 5 பேரிடமிருந்த சாதிக்கொடியைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், தசரா குழுக்கள் சாதி அடையாளங்களுடன் கூடிய டிஜிட்டல் பேனர்கள், பேட்ஜ்கள், கொடிகள், டி-சர்ட்கள் மற்றும் தொப்பிகளைப் பயன்படுத்தக் கூடாது என்றும், தடையை மீறும் குழுக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தசரா திருவிழாவின்போது சாதி அடையாளங்களைத் தவிர்த்து, பக்தர்கள் அமைதியாகவும் ஒற்றுமையுடனும் விழாவில் பங்கேற்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.