தூத்துக்குடி சிவன் கோவிலில் 7-ம் நூற்றாண்டை சேர்ந்த 13 ஓலைச் சுவடிகள் கண்டுபிடிப்பு!

தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில், 7-ம் நூற்றாண்டை சேர்ந்த 13 ஓலைச்சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி சிவன் கோவிலில் 7-ம் நூற்றாண்டை சேர்ந்த 13 ஓலைச் சுவடிகள் கண்டுபிடிப்பு!

தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில், 7-ம் நூற்றாண்டை சேர்ந்த 13 ஓலைச்சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் இந்துசமய அறநிலையத்துறையின் கோவில்கள், மடங்களில் உள்ள அரிய, பழமையான ஓலைச்சுவடிகளை திரட்டி பராமரித்து பாதுகாக்கவும், நூலாக்கம் செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். இதையொட்டி ஓலைச்சுவடி பராமரிப்பு, பாதுகாப்பு, நூலாக்கம் திட்ட பணிக்குழுவை அறிவித்தார்.

இந்த குழு பல்வேறு கோவில்களில் ஆய்வு செய்து ஓலைச்சுவடிகளை சேகரித்து பாதுகாத்து வருகிறது. அதன்படி ஓலைச்சுவடி பராமரிப்பு, பாதுகாப்பு, நூலாக்கம் திட்ட பணிக்குழு ஒருங்கிணைப்பாளரும், சுவடியியல் அறிஞருமான சு.தாமரைப்பாண்டியன் தலைமையில் சுவடியியல் ஆய்வாளர்கள் க.தமிழ்ச்சந்தியா, கு.பிரகாஷ்குமார், மா.பாலசுப்பிரமணியன் ஆகியோர் தூத்துக்குடி சங்கரராமேசுரவர் கோவிலில் பழமையான ஓலைச்சுவடிகள் உள்ளனவா? என்று ஆய்வு செய்தனர்.

அப்போது, ஒரு சிறிய கோபுர வடிவிலான பெட்டியில் துணியில் சுற்றி வைக்கப்பட்ட 13 ஓலைச்சுவடிகள் இருப்பதை கண்டுபிடித்து அந்த ஓலைச்சுவடிகளை குழுவினர் ஆய்வு செய்தனர். பின்னர் அந்த ஓலைச்சுவடிகளை பாதுகாப்பாக பராமரிப்பதற்கான பணிகளை மேற்கொண்டனர். 

 இதுகுறித்து திட்ட பணிக்குழு ஒருங்கிணைப்பாளரும், சுவடியியல் அறிஞருமான சு.தாமரைப்பாண்டியன் கூறுகையில்:-

ஓலைச்சுவடிகள் என்பது தமிழரின் வரலாற்று ஆவணங்களுள் முதன்மையானதாகும். தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டுள்ள எனது தலைமையிலான சுவடிப்பணிக்குழுவினர் 195 கோவில்களில் களஆய்வு செய்து ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 149 சுருணை ஏடுகளும், 335 இலக்கியச் சுவடிகளையும், 26 செப்புப்பட்டயங்களையும் கண்டுபிடித்து உள்ளோம். இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் கோவிலில் சுவடி இருப்புக்குறித்து கள ஆய்வு செய்யப்பட்டது. கள ஆய்வில் பழமையான 13 ஓலைச்சுவடிகள் கண்டறியப்பட்டு உள்ளன. இதில் ஒரு பெரிய ஓலைச்சுவடியில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் பாடிய தேவாரம் என்று அழைக்கப்படும் ஏழு திருமுறைகளும் தொகுக்கப்பட்ட நிலையில் இருந்தது.  

மற்றொரு பெரிய ஓலைச்சுவடியில் மேற்கண்ட ஏழு திருமுறைகளோடு காரைக்கால் அம்மையார் இயற்றிய திருப்பதிகங்களும் காணப்பட்டன. இந்த ஓலைச்சுவடியை பிரதிசெய்தவர் நம்பிக்குறிச்சி எனும் ஊரைச் சேர்ந்த மாசிலாமணி என்ற குறிப்பு ஓலைச்சுவடியில் இடம்பெற்றுள்ளது. அதேபோன்று சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் எனும் நூல் அடங்கிய ஒரு சுவடிப்பிரதியும் இருந்தது. இந்த சுவடியைப்பிரதி செய்தவர் ஆறுமுகமங்கலம் அருகில் உள்ள கொட்டாரக்குறிச்சியைச் சேர்ந்த ஆ. வைகுண்டம்பிள்ளை என்ற குறிப்பு சுவடியில் காணப்பட்டது. மற்றொரு சுவடியில் பெரியபுராணமும், நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதியும் உள்ளது. இந்தச் சுவடியை பிரதி செய்தவர் பொ.அய்யன்பெருமாள்பிள்ளை என்ற குறிப்பு சுவடியில் காணப்படுகிறது. 

 மாணிக்கவாசகர் இயற்றியதும் எட்டாம் திருமுறை என்று அழைக்கப்படும் திருவாசகம் அடங்கிய இரண்டு ஓலைச்சுவடிப்பிரதிகளும் இருந்தன. அத்தோடு மாணிக்கவாசகர் இயற்றிய திருக்கோவை நானூறு எனும் சுவடி ஒன்றும் இருந்தது. அகத்தியர் தேவாரத்திரட்டு, திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, புராணசாரம், தோத்திர சகத்திருவிருத்தம் ஆகிய நூல்கள் அடங்கிய ஒரு சுவடியும் இருந்தது. திருமுறை நூல்கள் இரண்டு பெரிய சுவடிகளில் பதினொன்றாம் திருமுறை நூல்கள் (40 நூல்கள்) முழுமையாக இருந்தன. இதில் சங்க இலக்கிய நூலாகக் கருதக்கூடிய திருமுருகாற்றுப்படை நூலும் உள்ளது. மற்றொரு சுவடியில் திருமூலர் இயற்றிய பத்தாம் திருமுறை எனப்படும் திருமந்திரம் நூல் முழுமையாக இருந்தது. இதில் பன்னிரு திருமுறை சுவடிகள் இருந்தன.

மேலும் சங்கரராமேஸ்வரர் கோவிலில் உள்ள பாகம்பிரியாள் அம்பாளின் பெருமையை எடுத்துரைக்கும் நூலாக, சானகிநாதன் என்பவர் எழுதிய அருள்தரும் பாகம்பிரியாள் திருப்பள்ளியெழுச்சி என்ற சுவடியும், பழனி கிருட்டிணன் என்பவர் எழுதிய பாகம்பிரியாள் இரட்டைமணிமாலை என்ற சுவடியும் இருந்தன. 

 இந்த கோவிலில் உள்ள சுவடிகள் பெரும்பாலும் 18 மற்றும் 19-ம் நூற்றாண்டுகளில் படியெடுக்கப்பட்டதாக தெரிய வருகிறது. மேலும் கண்டறியபட்ட சுவடிகளில் உள்ள நூல்கள் தோன்றிய காலம் 7 முதல் 9-ம் நூற்றாண்டு வரையிலானது என்று தமிழறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த நூல்கள் குறித்து இந்து சமய அறநிலையத்துறையின் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து உள்ளோம். என கூறினார்.

 இந்த ஆய்வின் போது கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.