“ஒன்றுமே இல்லை என்றால் 2026-ல் ஒன்றுமில்லாமல் போவீர்கள் – திமுகவுக்கு நயினார் எச்சரிக்கை”

தமிழக பெண்கள் பாதுகாப்பு, மத்திய பட்ஜெட், கஞ்சா விற்பனை, பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து தூத்துக்குடியில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்.

சென்னை செல்ல தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தமிழக அரசையும் திமுகவையும் கடுமையாக விமர்சித்தார்.

தமிழகத்திற்கு மத்திய அரசு பல்வேறு வளர்ச்சி திட்டங்களையும் நிதி ஒதுக்கீடுகளையும் வழங்கி வருவதாக தெரிவித்த அவர், மத்திய பட்ஜெட் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் “ஒன்றுமே இல்லை, ஒன்றுமே இல்லை” என கூறுவது பொறுப்பற்ற அரசியல் விமர்சனம் என சாடினார். பட்ஜெட்டை முழுமையாக வாசித்து, ஆய்வு செய்த பிறகே முதல்வர் கருத்து தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் தொடர்ச்சியாக விமர்சித்தால், வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஒன்றுமில்லாமல் போகும் என அவர் தெரிவித்தார்.

நடிகர் விஜய் தனது கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் தமிழகத்தின் பாரம்பரியமும் கலாச்சாரமும் புரியாமல் மேடையில் நடனம் ஆடியதாக விமர்சித்த நயினார் நாகேந்திரன், அரசியல் என்பது மேடை நிகழ்ச்சிகளோ, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளோ அல்ல; மக்களின் பிரச்சனைகளை புரிந்து கொண்டு தீர்வு காண்பதே அரசியல் என கூறினார். இவ்வாறு கட்சி தொடக்க விழாக்களில் நடனம் ஆடினால், அப்படியே ஆடிக்கொண்டே செல்ல வேண்டியதுதான் என்றும் அவர் விமர்சனமாக தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் தற்போது 55 சதவீத பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், கிராமங்களுக்கு கிராமம் கஞ்சா விற்பனை வெளிப்படையாக நடைபெறுகிறது என்றும் குற்றம் சாட்டினார். மாநிலத்தின் சட்ட ஒழுங்கு நிலை முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

திமுகவைச் சேர்ந்த அண்ணா நகர் ஞானசேகர், ஆரணி தெய்வச்செயல் உள்ளிட்ட 26 பேர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்ட நயினார் நாகேந்திரன், பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் திமுக அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாக கடுமையாக விமர்சித்தார்.

கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியால் தமிழகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் புதைகுழிக்குள் தள்ளியுள்ளார். இதற்கு மக்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் உரிய தீர்ப்பை வழங்குவார்கள் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.