தூத்துக்குடி வந்தடைந்த குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்! ஆளுநர் அர்லேகர், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஶ்ரீநாத், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு – இரண்டு முக்கிய விழாக்களில் பங்கேற்பு!

தூத்துக்குடி வந்தடைந்த குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்! ஆளுநர் அர்லேகர், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஶ்ரீநாத், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு – இரண்டு முக்கிய விழாக்களில் பங்கேற்பு!

இந்திய குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று வ.உ.சிதம்பரனார் கல்லூரியின் பவள விழா மற்றும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 105-வது நிறுவன விழா ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவர் தூத்துக்குடி வந்தடைந்தார்.

இதற்காக தனி விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு வருகை தந்த குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நேரில் சந்தித்து உற்சாகமாக வரவேற்றார்.

தொடர்ந்து, தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அ. ஶ்ரீநாத், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் குடியரசுத் துணைத் தலைவருக்கு வரவேற்பு அளித்தனர்.

மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

விமான நிலையத்தில் வரவேற்பை ஏற்றுக்கொண்ட குடியரசுத் துணைத் தலைவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக விழா நடைபெறும் இடங்களுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

தூத்துக்குடியின் கல்வி மற்றும் வணிக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த வ.உ.சிதம்பரனார் கல்லூரியின் பவள விழா மற்றும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 105-வது நிறுவன விழா ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளிலும் குடியரசுத் துணைத் தலைவர் பங்கேற்க உள்ளதால் மாவட்டத்தில் இன்றைய தினம் சிறப்பு கவனம் பெற்றுள்ளது.