கனிமொழி வாகனத்தை நிறுத்தி மக்கள் வாக்குவாதமா? பரவும் வீடியோவின் உண்மை என்ன? முழு பின்னணி
தூத்துக்குடி: தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி எம்பியின் வாகனத்தை நிறுத்தி தொண்டர்கள் வாக்குவாதம் செய்து எதிர்ப்பு தெரிவிப்பதாக இணையதளத்தில் வீடியோ பரவி வரும் நிலையில் அதன் பின்னணி என்ன தெரியுமா?.
இதோ விவரம்.
தூத்துக்குடி திமுக எம்பியாக இருப்பவர் கனிமொழி. கடந்த 2019 தேர்தலில் அவர் அப்போதைய பாஜகவின் மாநில தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜனை வீழ்த்தி வெற்றி பெற்றார். வரும் லோக்சபா தேர்தலில் மீண்டும் கனிமொழி தூத்துக்குடியில் திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் பாஜக போட்டியிடவில்லை. மாறாக பாஜக கூட்டணியில் ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தூத்துக்குடி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் எஸ்டிஆர் விஜயசீலன் களமிறங்கி உள்ளார். சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் ரொவினா ரூத் ஜான் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
தற்போதைய சூழலில் தூத்துக்குடி என்பது திமுகவின் கோட்டையாக உள்ளது. தூத்துக்குடி லோக்சபா தொகுதியை பொறுத்தமட்டில் விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி உள்ளிட்ட சட்டபை தொகுதிகள் உள்ளன. அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் உள்ளிட்ட அமைச்சர்கள் உள்ளனர், தூத்துக்குடி எம்பியாக கனிமொழி உள்ளார். மேலும் அவரை எதிர்த்து கட்சிகள் பிரபலமானவர்களை களமிறக்கவில்லை.
தற்போதைய நான்கு முனை போட்டியில் திமுகவின் கனிமொழி மட்டுமே பிரபலமான தலைவராக உள்ளார். இதனால் அவர் எளிதில் வெற்றி பெறலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தான் நேற்று தூத்துக்குடியில் கனிமொழி எம்பி பிரசாரம் செய்தார். அப்போது திடீரென்று திமுக, விசிக உள்பட கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் கனிமொழி எம்பியின் வாகனத்தை மறித்தனர்.
பிரசார வாகனத்தின் முன்புற இருக்கையில் அமர்ந்திருந்த கனிமொழி எம்பியை பார்த்து அவர்கள், ''நீங்கள் பேச வேண்டும். நீங்கள் பேசினால் போதும். நீங்கள் பேசிவிட்டு தான் இங்கிருந்து செல்ல வேண்டும். ஒரு நிமிடமாவது பேசிவிட்டு செல்ல வேண்டும்'' என கூறுகின்றனர். இதனை பிரசார வாகனத்தின் இருக்கையில் இருந்தபடி கனிமொழி எம்பி கேட்டதோடு, அவர்களை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் அவர்கள் சமாதானமடையவில்லை. கண்டிப்பாக பேச வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதாவது, ''தூத்துக்குடி எம்பி கனிமொழியின் வாகனத்தை நிறுத்தி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்'' என சிலர் பதிவிட்டு வருகின்றனர். மேலும் கேஎஸ் ராதாகிருஷ்ணன் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டு, ''தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி.. தூத்துக்குடியில் பாஜகவின் நல்ல வேட்பாளர் போட்டியிட்டு இருந்தால் நன்றியற்ற கனிமொழி உறுதியாக தோல்வியடைவார். இதை தமிழ்நாடு பாஜக உணர வேண்டும்... இன்றைய கனிமொழி நிலையை பாரீர்'' என வீடியோவை பதிவிட்டு கனிமொழிக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளதாக தெரிவித்து இருந்தார்.
இதுபற்றி நாம் விசாரித்தோம். மேலும் சம்பவ இடத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பான முழு வீடியோவையும் பார்த்தோம். அதன்படி, பிரசாரத்தில் தூத்துக்குடி எம்பி கனிமொழியின் வாகனத்தை நிறுத்தி பொதுமக்களும், கூட்டணி கட்சியினரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாக கனிமொழி பேச்சை கேட்க அவர்கள் ஆர்வமாக இருந்தனர். அதாவது கனிமொழி எம்பி அந்த இடத்தில் எதுவும் பேசாமல் செல்ல இருந்தார்.
ஆனால் கனிமொழியின் பேச்சை கேட்க ஆர்வமாக இருந்தவர்கள் அவரை வாகனத்தை மறித்து, ''நீங்கள் பேசிவிட்டு தான் செல்ல வேண்டும். அக்கா நீங்கள் கண்டிப்பாக பேச வேண்டும். ஒரு நிமிடமாவது பிரசார வாகனத்தின் மேல் நின்று பேசிவிட்டு செல்லுங்கள்'' என தெரிவித்தனர். இதையடுத்து கனிமொழியும், தொண்டர்கள் மற்றும் மக்களின் கோரிக்கையை ஏற்று பிரசார வாகனத்தின் மேல் ஏறி நின்று சில நிமிடங்கள் பேசிவிட்டு சென்றார். இந்த சம்பவத்தின் முதல் பாதியை மட்டும் சிலர் வலைதளங்களில் வெளியிட்டு கனிமொழி எம்பியின் பிரசார வாகனம் மறிக்கப்பட்டு பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததாக தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.