4 டிராக்டரில் 400 தட்டுகள்... பல லட்சம் மதிப்பிலான தாய் மாமன் சீர்வரிசை! ஓட்டப்பிடாரத்தில் திருவிழாவாக மாறிய புனித நீராட்டு விழா

4 டிராக்டரில் 400 தட்டுகள்... பல லட்சம் மதிப்பிலான தாய் மாமன் சீர்வரிசை! ஓட்டப்பிடாரத்தில் திருவிழாவாக மாறிய புனித நீராட்டு விழா

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேலமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற புனித நீராட்டு விழா, பிரம்மாண்டமான தாய் மாமன் சீர்வரிசையால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

மேலமங்கலத்தைச் சேர்ந்த சுரேஷ் – அழகுமாரி தம்பதியினரின் மூத்த மகள் முகிதாவின் புனித நீராட்டு விழாவையொட்டி, சங்கரராஜபுரத்தைச் சேர்ந்த தாய் மாமன்களான பவித்குமார் – அபிநயா, சூர்யா – விஜயலட்சுமி ஆகியோர் உறவினர்கள் மற்றும் கிராம மக்களுடன் இணைந்து பிரம்மாண்டமான சீர்வரிசை ஊர்வலத்தை நடத்தினர்.

400 தட்டுகளில் பழங்கள், இனிப்புகள் மற்றும் பல்வேறு சீர்வரிசைப் பொருட்கள் அலங்கரிக்கப்பட்டு, 4 டிராக்டர்களில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. கேரளா செண்டை மேளம், வாணவேடிக்கை, பெண்களின் நடன நிகழ்ச்சிகள் என விழா கோலாகலமாக நடைபெற்றது.

மேலும், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சீர்வரிசைகள் பெண்ணுக்கு வழங்கப்பட்ட நிலையில், மேலமங்கலம் கிராமமே திருவிழா சூழலில் காட்சியளித்தது. இந்த வித்தியாசமான சீர்வரிசை ஊர்வலம் அப்பகுதி மக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.