தூத்துக்குடியில் பரபரப்பு: மதுபோதையில் குடும்பத்தை மிரட்டிய மகனை தந்தையே தீ வைத்து எரித்துக் கொன்ற சோகம்!

தூத்துக்குடியில் பரபரப்பு: மதுபோதையில் குடும்பத்தை மிரட்டிய மகனை தந்தையே தீ வைத்து எரித்துக் கொன்ற சோகம்!

தூத்துக்குடி மாவட்டம் மடத்தூர் அம்மன் கோயில் தெருவில் குடும்பத் தகராறு கொடூர முடிவை எட்டியது. மதுபோதையில் தாய், தங்கை மற்றும் தந்தையைத் தாக்கி, குழந்தையைக் கொன்றுவிடுவதாக மிரட்டியதாகக் கூறப்படும் மகனை, பெற்ற தந்தையே தின்னர் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர் அருள்ராஜ் (32). ஆட்டோ ஓட்டுநரான இவர் நீண்டகாலமாக மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. 2021-ஆம் ஆண்டு கயத்தாறில் உள்ள மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்ற பின்னர் சில காலம் குடிப்பழக்கத்தை நிறுத்தியிருந்தாலும், பின்னர் மீண்டும் மதுவுக்கு அடிமையானதால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று இரவு (ஜூன் 30) கடும் மதுபோதையில் வீட்டிற்கு வந்த அருள்ராஜ் தனது தாயாரைத் தாக்கியதில், அவருக்கு தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், உடல்நலக்குறைவால் குழந்தையுடன் தாய் வீட்டிற்கு வந்திருந்த தனது தங்கையையும் மிரட்டி, குழந்தையைக் கொன்றுவிடுவதாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதைத் தடுக்க முயன்ற தந்தை தளமுத்து (60) மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து குடும்பத்தினர் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக் கொண்ட நிலையில், அருள்ராஜ் வீட்டு வாசலில் படுத்து தூங்கியதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த தந்தை தளமுத்து, வீட்டில் பெயிண்டிங் பணிக்காக வைத்திருந்த தின்னரை அருள்ராஜ் மீது ஊற்றி தீ வைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தீக்காயங்களால் அருள்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்த சிப்காட் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். தந்தை தளமுத்துவை கைது செய்து, சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பு: இந்தச் செய்தியில் இடம்பெறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணைத் தகவல்களின் அடிப்படையில் கூறப்பட்டவை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.