தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் திடீர் லாரி வேலைநிறுத்தம்! நள்ளிரவில் பேச்சுவார்த்தை – நிர்வாகம் எழுத்துப்பூர்வ உறுதி

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் திடீர் லாரி வேலைநிறுத்தம்! நள்ளிரவில் பேச்சுவார்த்தை – நிர்வாகம் எழுத்துப்பூர்வ உறுதி

தூத்துக்குடி: வ.உ.சி. துறைமுகத்தின் 9-வது கன்டெய்னர் முனையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும், ஏற்றுமதி கன்டெய்னர்களைக் கையாள்வதில் ஏற்படும் காலதாமதத்தைச் சரிசெய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கன்டெய்னர் லாரி ஓட்டுநர்கள் நேற்று இரவு திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓட்டுநர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் (AICCTU) சார்பில் இரவு 7 மணி முதல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு AICCTU மாநிலத் துணைத் தலைவர் சகாயம் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் சரவணன், நிஷாந்த், முனியசாமி உள்ளிட்ட திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டம் காரணமாக 9-வது கன்டெய்னர் முனையத்தில் லாரி இயக்கம் பாதிக்கப்பட்ட நிலையில், ‘தூத்துக்குடி இன்டர்நேஷனல் கன்டெய்னர் டெர்மினல் பிரைவேட் லிமிடெட்’ நிர்வாகத்தினர் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையின் முடிவில், லாரி ஓட்டுநர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருவதாகவும், ஏற்றுமதி கன்டெய்னர்களைக் கையாள்வதில் ஏற்படும் காலதாமதத்தை உடனடியாகச் சரிசெய்வதாகவும் நிர்வாகத் தரப்பில் எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நள்ளிரவு சுமார் 1 மணியளவில் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. தொடர்ந்து கன்டெய்னர் லாரி ஓட்டுநர்கள் பணிக்குத் திரும்பினர்.