தூத்துக்குடியில் டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராடிய பெண்கள் வலுக்கட்டாயமாகக் கைது! போலீஸ் பாதுகாப்புடன் மதுபான விற்பனை தொடங்கப்பட்டது..!

தூத்துக்குடியில் டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராடிய பெண்கள் வலுக்கட்டாயமாகக் கைது! போலீஸ் பாதுகாப்புடன் மதுபான விற்பனை தொடங்கப்பட்டது..!

தூத்துக்குடி: மதுக்கடையை மூடக்கோரி இரண்டு நாட்களாக போராட்டம் நடத்திய கிராம மக்கள்… 50-க்கும் மேற்பட்ட பெண்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்த போலீசார்… போராட்டக்காரர்களைத் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துவிட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை! தூத்துக்குடி அருகே நடைபெற்ற இந்தச் சம்பவம் கிராம மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி வெள்ளைப்பட்டி அருகே உள்ள டாஸ்மாக் கடை எண் 10060-ஐ மூடக்கோரி, வெள்ளைப்பட்டி, துப்பாஸ்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி, மதுக்கடையை உடனடியாக மூட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில், இரண்டாவது நாளாக நடைபெற்ற போராட்டத்தின்போது பெண்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கடையை முற்றுகையிட்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர்.

போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. மதுபான விற்பனை துவங்கப்பட்டது. மேலும் மதுபான கடைக்கு அருகே போலீசார் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.

மதுக்கடைக்கு எதிராகப் போராடிய பெண்கள் கைது செய்யப்பட்டதும், போலீஸ் பாதுகாப்புடன் கடை திறக்கப்பட்டதும் தூத்துக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.