கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி 31பேர் உயிரிழந்தனர்!
கள்ளக்குறிச்சியில் புதன்கிழமை கள்ளச்சாராயம் அருந்தியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு பெண்கள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர். மேலும், 70-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் கோமுகி ஆற்றங்கரையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கனகு மகன் கன்னுக்குட்டி (எ) கோவிந்தராஜ் (49), அவரது மனைவி விஜயா (42), கனகுவின் மற்றொரு மகன் தாமோதரன் (40) ஆகிய மூவரும் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்களிடம் செவ்வாய்க்கிழமை பலர் கள்ளச்சாராயம் அருந்தியதில், அவர்களுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, வாயில் நுரை தள்ளியவாறு மயங்கி விழுந்தனர்.
தொடர்ந்து, புதன்கிழமை காலையும் பலர் கள்ளச்சாராயம் அருந்திவிட்டு மயங்கிய நிலையில், அவர்களுக்கு பார்வை மங்கியதுடன், நெஞ்சு எரிச்சல், வயிற்று வலி ஏற்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல, கள்ளக்குறிச்சியை அடுத்த மாதவச்சேரி பகுதியிலும் கள்ளச்சாராயம் அருந்திய பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் முருகன் (47), ராஜேந்திரன் மகன் சுரேஷ் (40), இவரது மனைவி வடிவுக்கரசி (32), சின்னு மகன் கந்தன் (47), பழனி மகன் ஜெகதீசன் (60), கணேசன் மகன் பிரவீன் (27), தருமன் மகன் சுரேஷ் (45), மண்ணாங்கட்டி மகன் சுரேஷ் (39), கண்ணன் மகன் சேகர் (65) ஆகிய 9 பேர் உயிரிழந்தனர்.
இதேபோல, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் ஏமப்பேர் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி மகன் ஆறுமுகம் (65), கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த பச்சமுத்து மனைவி தனக்கொடி (60), வீரசோழபுரத்தைச் சேர்ந்த மணி மகன் செல்வம் (30), சிறுவங்கூர் பகுதியைச் சேர்ந்த கருத்தன் மகன் கோபால் (60), மாடூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் கண்ணன் (36) ஆகிய 5 பேர் இறந்தனர்.
புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் மணி (எ) சுப்பிரமணி (45), குப்பன் மனைவி இந்திரா (48), சின்னஏட்டு மகன் கிருஷ்ணமூர்த்தி (62) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.
சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாதவச்சேரியைச் சேர்ந்த அழகு மகன் நாராயணசாமி (65), கள்ளக்குறிச்சி தங்கவேல் மகன் ராமு (50), கோபால் மகன் சுப்பிரமணி (50) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.
விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் மணிகண்டன் (35) உயிரிழந்தார்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி மேலும் சிலர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்தம் 25 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களில் கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, சேலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 70-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஷ்ரவன் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சமய்சிங் மீனா, கள்ளக்குறிச்சி எம்.பி. தே.மலையரசன், எம்எல்ஏக்கள் க.கார்த்திகேயன் (ரிஷிவந்தியம்), தா.உதயசூரியன் (சங்கராபுரம்), கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ மா.செந்தில்குமார், கள்ளக்குறிச்சி டிஎஸ்பி கு.தேவராஜ், விழுப்புரம் டிஎஸ்பி மோகன், வட்டாட்சியர் பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் புவனேஷ்வரி பெருமாள் உள்ளிட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரையும், அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினர்.
3 பேர் கைது: இந்த சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ரு.ஆனந்தன் வழக்குப் பதிவு செய்து, கள்ளச்சாராய வியாபாரிகள் கன்னுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, தாமோதரன் ஆகியோரை கைது செய்தனர்.
ஜிப்மர் முன் போராட்டம்: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை முன் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள், சிகிச்சைப் பெற்று வருபவர்களின் உறவினர்கள் புதன்கிழமை இரவு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போலீஸôர் குவிக்கப்பட்டனர்.
அமைச்சர்கள் ஆய்வு: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புதன்கிழமை இரவு வந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்ததுடன், விரைவான சிகிச்சை அளிக்குமாறும் அறிவுறுத்தினர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், எக்கியார்குப்பத்தில் கடந்த 2023, மே 13-ஆம் தேதி கள்ளச்சாராயம் அருந்தி 80 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒரு பெண் உள்பட 14 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 பேரும் கள்ளச்சாராயம் குடித்து இறந்தது குறிப்பிடத்தக்கது.
சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.சாராயம் விற்ற கோவிந்தராஜ் என்பவர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 200 லிட்டர் கள்ளச் சாராயம் கைப்பற்றப்பட்டு விழுப்புரம் மண்டல தடய அறிவியல் ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பப்பட்டது. சோதனையில், சாராயத்தில் மெத்தனால் கலந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. சாராயம் அருந்தி பலர் இறந்த வழக்கை தீர விசாரிக்கவும் உரிய மேல் நடவடிக்கை எடுக்கவும் அந்த வழக்கு உடனடியாக சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி ஆட்சியர் மாற்றம்: எஸ்.பி., 9 பேர் பணியிடை நீக்கம்
சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த சம்பவத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், காவல் கண்காணிப்பாளர் உள்பட 10 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத் உடனடியாகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருடன் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி., தமிழ்செல்வன், திருக்கோவிலூர் டிஎஸ்பி., மனோஜ், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர்கள் கவிதா, பாண்டிசெல்வி, ஆனந்தன், திருக்கோவிலூர் சார்-ஆய்வாளர்கள் பாரதி, ஷிவ்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புதிய ஆட்சியர் - எஸ்.பி.: கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் ஒட்டுமொத்தமாக மாற்றப்பட்ட நிலையில், புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த், புதிய காவல் கண்காணிப்பாளராக ரஜத் சதுர்வேதி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
--------------------------------------------------------------------
உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை தெரிந்துகொள்ள...