12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.?: தூத்துக்குடி VVD சிக்னலில் உறவினர்கள் சாலை மறியல் – போலீசாருடன் தள்ளுமுள்ளு, பரபரப்பு

12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.?: தூத்துக்குடி VVD சிக்னலில் உறவினர்கள் சாலை மறியல் – போலீசாருடன் தள்ளுமுள்ளு, பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சுப்புராஜ் – காளீஸ்வரி தம்பதியின் மூத்த மகள் குறுக்கு சாலையில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை வேடநத்தம் கிராமம் அருகிலுள்ள காட்டுப்பகுதியில் மாணவி படு கொலை செய்யப்பட்ட நிலையில் உடலில் பல்வேறு காயங்களுடன் சடலமாக கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கிராம மக்கள் மற்றும் மாணவியின் உறவினர்கள் வேடநத்தம் – குளத்தூர் குறுக்கு சாலையில் இரவு முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் மாணவியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் 6க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சிலரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவியின் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது பெற்றோர், உறவினர்கள், பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பிரேத பரிசோதனைக்கு மாணவியின் தந்தை கையெழுத்து வழங்கியதை தொடர்ந்து மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஆனால் குற்றவாளிகளை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் வரை மாணவியின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் மற்றும் அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தூத்துக்குடி மாநகரின் முக்கிய சாலையான VVD சிக்னல் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் தூத்துக்குடி மாநகரில் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது