நெல்லையில் பயங்கரம்.. வடமாநில தொழிலாளி உள்பட 2 பேர் வெட்டிக்கொலை! 6 பேர் கும்பல் வெறிச்செயல்

நெல்லையில் பயங்கரம்.. வடமாநில தொழிலாளி உள்பட 2 பேர் வெட்டிக்கொலை! 6 பேர் கும்பல் வெறிச்செயல்

நெல்லை நாங்குநேரி அருகே வடமாநில தொழிலாளி உள்பட 2 பேர் வெட்டி படு கொலை செய்யப்பட்டுள்ளனர். 5 பேர் மீது 6 பேர் கும்பலினர் பெட்ரோல் குண்டை வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்துள்ளனர். இந்த படுகொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விசாரிக்க சென்ற காவல்துறை வாகனம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

நெல்லை நாங்குநேரி அருகே பெரும்பத்து என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள டீக்கடையில் வடமாநில தொழிலாளி ஜான் என்பவர் நின்று கொண்டிருந்தார். மேலும் சிலரும் நின்று பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு 3 இருசக்கர வாகனங்களில் 6 பேர் கும்பல் வந்தனர்.

திடீரென அவர்கள் தாங்கள் வைத்திருந்த பெட்ரோல் குண்டுகளை வீசியிருக்கிறார்கள். மேலும் கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அங்கிருந்த 5 பேரை வெட்டியுள்ளனர். இதில் ஜான் உள்பட 2 பேர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றதாகவும், படுகாயமடைந்த மேலும் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த கொலையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கொலை தொடர்பாக விசாரிக்க சென்ற போலீஸ் வாகனம் மீதும் கல்வீசி தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அந்த கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.