தூத்துக்குடியில் கருப்பு பையில் எலும்புக்கூடு? மின் கம்பம் அருகே கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு – போலீஸ் விசாரணை

தூத்துக்குடியில் கருப்பு பையில் எலும்புக்கூடு? மின் கம்பம் அருகே கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு – போலீஸ் விசாரணை

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பார்த்தசாரதி சாலையில் மின் கம்பம் அருகே கருப்பு பையில் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பகுதியில் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் ஊழியர்கள் என பலர் நடமாடி வரும் நிலையில் சாலையோரத்தில் உள்ள மின் கம்பம் அருகே கருப்பு பை ஒன்று சந்தேகத்திற்கிடமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதை அருகில் சென்று பார்த்த பொதுமக்கள் அந்த பைக்குள் எலும்புக்கூடு போன்ற அமைப்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து உடனடியாக அப்பகுதி மக்கள் வனவாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த கருப்பு பையில் இருந்தது உண்மையில் மனித எலும்புக்கூடா அல்லது மாந்திரீகம் உள்ளிட்ட ஏதேனும் செயல்களுக்காக யாராவது கொண்டு வந்து போட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி மாநகர காவல் கண்காணிப்பாளர் சுனில் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் கருப்பு பையில் இருந்த எலும்புக்கூடு ஆம்புலன்ஸில் ஏற்றி மேலான ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

அதே நேரத்தில் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, இந்த கருப்பு பையை யார் கொண்டு வந்து வைத்தார்கள் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மக்கள் அதிகமாக நடமாடும் சாலையோரத்தில் கருப்பு பையில் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தூத்துக்குடி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.