5 வருடம் சொகுசில் இல்லை… மக்களோடு தான் இருந்தேன்” – அமைச்சர் கீதா ஜீவன்

5 வருடம் சொகுசில் இல்லை… மக்களோடு தான் இருந்தேன்” – அமைச்சர் கீதா ஜீவன்

*ஐந்து வருடம் எங்கே சென்றீர்கள் என்று யாரும் கேட்கவில்லை.. ஐந்து வருடம் சொகுசில் இல்லை. மக்களுடன் பணியில் தான் உள்ளேன். சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேச்சு.,

தூத்துக்குடியில், முஸ்லீம் லீக் கட்சியில் 79ஆம் ஆண்டு நிறுவன விழா நடைபெற்றது. இதில், சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, திமுக மாநகர் செயலாளர் ஆனந்த சேகரன், காங்கிரஸ், திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் பேசும்போது,

ஒற்றுமையுடன் இருந்தால் யாராலும் நம்மை வீழ்த்த முடியாது. முஸ்லிம் சமுதாயத்தினர் ரமலான் மாதத்தில் கடைப்பிடிக்கும் நோன்பு ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் மனிதநேயத்தை எடுத்துரைத்தார். மதம் எதுவாக இருந்தாலும் அன்பும் கருணையும் தான் போதிக்கிறது.. ரமலான் காலத்தில் நோன்பு மட்டுமல்லாமல், ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வரும் முஸ்லிம் சமூகத்தின் மனிதநேய பணியை பாராட்டினார்.

"நீங்கள் காலை முதல் மாலை வரை நீண்ட நேரம் நோன்பு இருந்து இறைவனை வணங்கி வருகின்றீர்கள். இல்லாதவர்களுக்கு உதவி செய்து வருகிறீர்கள். இந்த மனிதநேய உணர்வே சமூக ஒற்றுமையை வலுப்படுத்துகிறது. இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏற்பாடு செய்துள்ள இந்த விருந்தில் கலந்து கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது.. “நாம் ஒற்றுமையாக இருந்தால் யாராலும் நம்மை வீழ்த்த முடியாது. ஆனால் நம்மிடையே குழப்பம் ஏற்படுத்தி, பிரிவினையை உருவாக்க சிலர் முயற்சி செய்வார்கள். அதற்கு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

அத்துடன், “பாசிச பாஜக ஆட்சி எந்த அளவிற்கும் இறங்கி நம்முடைய கூட்டணியை முறியடிக்க முயற்சி செய்கிறது. வாக்குகளை சிதறடிக்க திட்டமிடுகிறது. ஆனால் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கும் என்பதை நிரூபிப்போம்.. 

“எல்லாருக்கும் எல்லாம்” என்ற கொள்கையின் அடிப்படையில் அரசு செயல்பட்டு வருகிறது. இஸ்லாமியர், கிறிஸ்தவர், இந்துக்கள் என அனைத்து சமுதாயங்களுக்கும் சமமாக நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. கோவில்களின் திருப்பணிகளுக்கும் அரசின் மூலம் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் நான்காயிரம் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது என்பது ஒரு பெரிய சாதனை.. தமிழகத்தில் தொழில் முதலீடுகள் அதிகரித்து வருகிறது. சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வந்துள்ளன. இதன் மூலம் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன.. 

 

தூத்துக்குடியில், சாலை வசதிகள், மழைநீர் வடிகால்கள், கழிவுநீர் கால்வாய்கள், பூங்காக்கள், மகளிர் பூங்கா, 13 நகர் நல மையங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மின்சார வசதிகளை மேம்படுத்தும் வகையில் சுமார் 210 டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, மினி பஸ் வசதி, விடியல் பயணம் உள்ளிட்ட திட்டங்கள் மக்களுக்கு பெரும் நன்மை அளித்து வருகிறது. 

“முன்பு தூத்துக்குடி நகரத்தில் சுமார் 50 சதவீத மக்கள் மட்டுமே காப்பீடு பெற்றிருந்தனர். தற்போது அது 95 சதவீதமாக உயர்ந்துள்ளது. மீதமுள்ள மக்களும் காப்பீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும்..

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் பல இடங்களுக்கு சென்று வருகிறேன்.. ஐந்து வருடம் எங்கே சென்றீர்கள் என்று யாரும் கேட்கவில்லை. யாரும் வெற்றி பெற்று சொகுசாக இருக்கவில்லை மக்களோடு மக்களாக சுற்றி, சுற்றி பணி செய்பவர்களாகத்தான் இருக்கின்றோம் அதனால் தான் மக்கள் எங்களை நம்புகிறார்கள். முடிவில், “மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று திராவிட மாடல் 2.0 ஆட்சி தமிழகத்தில் அமைய அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். இறைவனை வணங்கி வாழ்வோம், இல்லாதவர்களுக்கு வழங்கி வாழ்வோம், அனைவரையும் இணைத்து வாழ்வோம்” என்று கூறி அனைவருக்கும் ரமலான் வாழ்த்துகளை தெரிவித்தார்.