தூத்துக்குடியில் காமெடி சம்பவம்... 7 பவுன் தாலி பறித்த திருடன்… லிப்ட் கேட்டவர் போலீஸ் அதிகாரி!

தூத்துக்குடியில் காமெடி சம்பவம்... 7 பவுன் தாலி பறித்த திருடன்… லிப்ட் கேட்டவர் போலீஸ் அதிகாரி!

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் நடந்த திருட்டு சம்பவம் ஒன்று தற்போது மக்கள் மத்தியில் சிரிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சிவஜோதி நகர் பகுதியில் வசித்து வரும் சிவகமலா (43) என்பவர் வீட்டிற்குள் நேற்று மர்ம நபர் ஒருவர் நுழைந்து, கத்தியால் மிரட்டி அவருடைய கழுத்தில் இருந்த சுமார் 7 பவுன் தாலி செயினை பறிக்க முயன்றார்.

ஆனால் அச்சமின்றி தைரியம் காட்டிய சிவகமலா, அந்த நபரின் கையை கடித்து காயப்படுத்தினார். இருந்தாலும் அந்த நபர் செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதும், போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர்.

இதற்கிடையில் கையில் கடிபட்ட காயத்துடன் ஓடி வந்த அந்த நபர், வழியில் சென்ற ஒருவரிடம் லிப்ட் கேட்டுள்ளார்.

ஆனால் அவர் சாதாரண நபர் அல்ல…

விரல் ரேகை பிரிவு உதவி ஆய்வாளர் பிரேம்குமார்!

கையில் இருந்த காயம் மற்றும் போலீஸ் வாட்ஸ்அப் குழுவில் பகிரப்பட்டிருந்த புகைப்படம் ஒத்துப்போனதால் சந்தேகம் அடைந்த அதிகாரி உடனடியாக விசாரணை நடத்தினார். பின்னர் மற்ற போலீசாரை அழைத்து அந்த நபரை பிடித்தனர்.

விசாரணையில் அவர் தூத்துக்குடி டிஎம்பி காலனி சேர்ந்த சசிகுமார் (30) என்பதும் தெரிய வந்தது. அவரிடமிருந்து திருடப்பட்ட 7 பவுன் தாலி செயினும் மீட்கப்பட்டது.

இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகுமாரை பேரூரணி சிறையில் அடைத்தனர்.

திருடி தப்பியவன்… லிப்ட் கேட்டவர் போலீஸ் அதிகாரி என்பதால் நேரடியாக போலீசாரிடமே மாட்டிக்கொண்டது இந்த சம்பவத்தின் காமெடி திருப்பமாக பேசப்படுகிறது.