இந்தியாவின் முதல் பசுமை துறைமுகமாக மாறும் தூத்துக்குடி வஉசி துறைமுகம்..!
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை இந்தியாவின் முதல் பசுமை துறைமுகமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என துறைமுக ஆணைய தலைவர் ராமச்சந்திரன் பேசினார்.
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை இந்தியாவின் முதல் பசுமை துறைமுகமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என துறைமுக ஆணைய தலைவர் ராமச்சந்திரன் பேசினார்.
நாட்டின் 74 ஆவது குடியரசு தின விழா, வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் கொண்டாடப்பட்டது. துறைமுக ஆணையத் தலைவர் ராமச்சந்திரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, துறைமுக தீயணைப்புப் படை, துறைமுக பள்ளி மாணவ, மாணவியர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
தொடர்ந்து, துறைமுக ஆணையத் தலைவர் ராமச்சந்திரன் பேசியதாவது:
இந்திய அரசியலமைப்பானது ஜனநாயகம், நீதி, சுகந்திரம் மற்றும் சமத்துவத்திற்கான சான்றாகும். இது அனைத்து குடிமக்களுக்கான சில அடிப்படை உரிமைகளைக் உத்தரவாதப்படுத்தியதுடன், அரசு வெளிப்படையாக மற்றும் பொறுப்பான முறையில் செயல்படுவதற்கான கட்டமைப்புகளையும் வழங்குகிறது.
துறைமுகத்தில் சரக்கு கையாளுவதற்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்பு திட்டப்பணிகளான துறைமுக நுழைவு வாயிலை தற்போதுள்ள 153 மீட்டரில் இருந்து 230 மீட்டராக அகலப்படுத்தும் பணி, பொது சரக்குதளம் 9-ஐ சரக்குபெட்டக முனையமாக மாற்றுதல், நிலக்கரி தளம் 1 மற்றும் 2, வடக்கு சரக்குதளம் 1-இல் கன்வேயர் இணைப்பு மூலம் கையாளுவதற்கான ஒப்பந்த விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
மேலும், வடக்கு சரக்குதளம் 3-ஐ இயந்திரமயமாக்கல் மற்றும் ஆழப்படுத்தும் பணி ஆகிய திட்டங்ளை செயல்படுத்தி வருகிறது. மத்திய கப்பல், துறைமுகங்கள் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் விடுத்துள்ள உறுதியினை கருத்தில் கொண்டு 2030 ஆம் ஆண்டிற்குள், அனைத்து பெருந்துறைமுகங்களும் மின்சாரத்தில் முழுமையாகத் தன்னிறைவு பெறக்கூடியதாக மாற்றப்படும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 400 கிலோவாட் மேற்கூரை சூரிய மின் உற்பத்தி நிலையம், 5 மெகாவாட் தரைதள சூரிய மின் நிலையம் மற்றும் 2 மெகாவாட் காற்றாலை மின்சார உற்பத்தி போன்ற பல்வேறு திட்டபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்தத் திட்டங்கள் முடிவடையும் தருவாயில், புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி மூலம் பெறப்படும் முழு மின்ஆற்றலை கொண்டு துறைமுகத்திற்கு தேவையான மின்ஆற்றலை பூர்த்தி செய்ய முடியும், இதன் மூலம் முழுமையாக புதுபிக்கப்பட்ட மின்ஆற்றலை கொண்டு செயல்படும் இந்தியாவின் முதல் பெருந்துறைமுகமாக வ.உ.சிதம்பரனார் துறைமுகம் திகழ்வதோடு, இந்தியாவின் முதல் பசுமை துறைமுகமாக மாறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் பெருநிறுவன சமூக பொறுப்பு கூட்டமைப்பின் கீழ் 8 திட்டங்கள் 184.15 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்த மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது என்று துறைமுக ஆணையத் தலைவர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
தொடர்ந்து, 2021-2022 ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட துறைமுக உபயோகிப்பாளர்களான, கப்பல் முகவர்கள், ஸ்டிவிடோர், சுங்கதுறை முகவர்கள், சரக்குப் பெட்டகம் இயக்குபவர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
மேலும் துறைமுகத்தில் மிகச் சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு சான்றிதழ்களை துறைமுக ஆணையத் தலைவர் ராமச்சந்திரன் வழங்கி பாராட்டினார். தொடர்ந்து, துறைமுக பள்ளி மைதானத்தில் ரூ. 3.2 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கடற்கரை வாலிபால் மைதானத்தை துறைமுக ஆணையத் தலைவர் ராமசந்திரன் திறந்து வைத்தார். அப்போது, துறைமுக ஆணைய துணைத் தலைவர் பிமல்குமார் ஜா மற்றும் துறை தலைவர்கள் உடனிருந்தனர்