என்ன முழக்கம் எழுமோ?: லோக்சபாவில் தமிழ்நாட்டின் 39 எம்.பிக்களும் இன்று பதவியேற்பு!

என்ன முழக்கம் எழுமோ?: லோக்சபாவில் தமிழ்நாட்டின் 39 எம்.பிக்களும் இன்று பதவியேற்பு!

டெல்லி: லோக்சபாவில் தமிழ்நாட்டின் 39 எம்பிக்களும் இன்று பதவியேற்க உள்ளனர். தமிழக எம்பிக்கள் பதவியேற்கும் போது என்ன முழக்கங்களை எழுப்புவார்கள்; இதற்கு பாஜக கூட்டணி தரப்பில் என்ன பதில் முழக்கம் எழுப்பப்படும் என்பது எதிர்பார்ப்பு.

மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கையடக்க அரசியல் சாசனப் புத்தகத்துடன் இன்று எம்பியாக பதவியேற்க இருக்கிறார். 18-வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இந்தக் கூட்டத் தொடரில் முதலில் தற்காலிக சபாநாயகராக பர்த்ருஹரி மகதாப் நியமிக்கப்பட்டார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து முற்பகல் 11 மணிக்கு தேசிய கீதம் இசைக்கப்பட்டு லோக்சபா கூட்டம் தொடங்கியது.

மோடிக்கு எதிர்ப்பு: முதலில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பிரதமர் மோடி முதலில் எம்பியாக பதவியேற்றார். அப்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட "இந்தியா" கூட்டணி எம்பிக்கள் கைகளில் அரசியல் சாசனப் புத்தகத்தை உயர்த்திப் பிடித்து எதிர்ப்புத் தெரிவித்தனர்.

முதல் நாளிலேயே சலசலப்பு: இதனையடுத்து தற்காலிக துணை சபாநாயகர்களாக கொடிக்குன்னில் சுரேஷ், டிஆர்பாலு, சுதிப் பந்தோபாத்யாய் ஆகிய இந்தியா கூட்டணி எம்பிக்களை பதவியேற்க அழைத்தார் தற்காலிக சபாநாயகர். ஆனால் இதனை ஏற்க மறுத்தனர் இந்தியா கூட்டணி எம்பிக்கள். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.

280 எம்பிக்கள் பதவியேற்றனர்: இதனையடுத்து மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா உள்ளிட்டோர் ஏம்பிகளாக பதவியேற்றனர். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எம்பியாக பதவியேற்ற போது, நீட் தேர்வு முறைகேடுகளை முன்வைத்து எதிர்ப்பு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. முதல் நாளில் மொத்தம் 280 எம்பிக்கள் நேற்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். எம்பிக்கள் கடவுளின் பெயராலும் மனசாட்சியின் பெயராலும் ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் தாய்மொழிகளில் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

தமிழக எம்பிக்கள் பதவியேற்பு: லோக்சபாவில் 2-வது நாளாக இன்று தமிழகம் உட்பட இதர மாநில எம்பிக்கள் பதவியேற்கின்றனர். தமிழகத்தின் 39 எம்பிக்களும் பகல் 1 மணி முதல் 3 மணி வரை பதவியேற்க உள்ளனர். கடந்த முறை லோக்சபாவில் தமிழக எம்பிக்கள் பதவியேற்ற போது, பெரியார் வாழ்க- தமிழ் வாழ்க என முழங்கினர். இதற்கு ஜெய் ஶ்ரீராம், பாரத் மாதா கீ ஜே என பதில் முழக்கம் எழுப்பியது பாஜக தரப்பு. இன்று பதவியேற்கும் போது தமிழக எம்பிக்கள் என்ன முழக்கங்களை எழுப்புவார்கள் என்பது எதிர்பார்ப்பு.

ராகுல் பதவியேற்பு: மூத்த காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தியும் இன்று எம்பியாக பதவியேற்க உள்ளார். ராகுல் காந்தி, கையடக்க அரசியல் சாசனப் புத்தகத்துடன் எம்பியாக பதவியேற்கிறார்.

நாளை சபாநாயகர் தேர்தல்: இதனையடுத்து லோக்சபாவில் நாளை சபாநாயகர் தேர்தல் நடைபெறும். பின்னர் ஜூன் 27-ந் தேதி ராஜ்யசபா தொடங்கும். அன்றைய தினம் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுவார். பின்னர் இரு சபைகளிலும் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெறும். ஜூலை 2 அல்லது ஜூலை 3-ந் தேதி இந்த விவாதங்களுக்கு பதிலளித்து பிரதமர் மோடி உரையாற்றுவார். ஜூன் 3-ந் தேதியுடன் 18-வது லோக்சபாவின் முதலாவது கூட்டத் தொடர் நிறைவடையும். ஜூலை 22-ந் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

---------------------------------------------------------------

உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை தெரிந்துகொள்ள‌...

WHATSAPP GROUP LINK 1 :- CLICK HERE

WHATSAPP GROUP LINK 2 :- CLICK HERE

JOIN WHATSAPP CHANNEL CLICK HERE :-

GOOGLE NEWS LINK :- CLICK HERE