டீக்கடையில் உதவி கேட்ட மாணவி.. கட்டுக்கட்டாக பணத்தை அள்ளி கொடுத்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!

டீக்கடையில் உதவி கேட்ட மாணவி.. கட்டுக்கட்டாக பணத்தை அள்ளி கொடுத்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!

திருச்செந்தூர் அருகே டீக்கடைக்கு டீ குடிக்க போன அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தன்னிடம் உதவி கேட்ட மாணவிக்கு கட்டுக்கட்டாக பணத்தை அள்ளி கொடுத்தார்.

இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மீன்வளம் மற்றும் மீன்வளத்றை அமைச்சராக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். இவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏ ஆவார். இந்நிலையில் நேற்று திருச்செந்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் காரில் புறப்பட்டார். அப்போது அடைக்கலாபுரம் பகுதியில் காரை நிறுத்தி சாலையோரம் இருந்த டீக்கடையில் தனது ஆதரவாளர்களுடன் சென்றார்.

டீ சொல்லிவிட்டு டீக்கடையில் போடப்பட்டு இருந்து இருக்கையில் அமர்ந்து அவர் தன்னுடன் வந்தவர்களுடன் பேசி கொண்டிருந்தார். இந்த வேளையில் அதே பகுதியை சேர்ந்த அந்தோணி பிச்சை என்ற கூலித்தொழிலாளியின் மகள் ஆஷா அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்தார். அப்போது அவர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் ஒரு வெள்ளை கவரில் கோரிக்கை மனு அளித்தார்.

 உடனே மனுவை அவர் பிரித்து பார்த்தார். அப்போது உயர் படிப்புக்கு லேப்டாப் தேவையாக உள்ளது. உதவி செய்யும்படி ஆஷா கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்து அனிதா ராதாகிருஷ்ணன் அவரது படிப்பு பற்றி கேட்டார். மேலும் லேப்டாப் உள்ளிட்டவற்றுக்கு ஆகும் செலவை கேட்டார். அதற்கு ஆஷா ரூ75 ஆயிரம் தேவை என்றார்.

இதை கேட்டதும் சற்றும் யோசிக்காத அனிதா ராதாகிருஷ்ணன் தனது உதவியாளரை அழைத்து ரூ.75 ஆயிரம் எடுத்த வரும்படி கூறினார். அவர் 3 கட்டுகளாக ரூ.75 ஆயிரத்தை எடுத்து வந்தார். இதை மாணவி ஆஷாவிடம் வழங்கிய அனிதா ராதாகிருஷ்ணன், ''நல்லா படிக்கணும்மா. இது முதலமைச்சர் கொடுக்கிற பணம்'' எனக்கூறினார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.