வாட்ஸ் அப்பில் லிங்க் அனுப்பி ரூ.34 லட்சம் மோசடி - 4பேர் கைது!

வாட்ஸ் அப்பில் லிங்க் அனுப்பி ரூ.34 லட்சம் மோசடி - 4பேர் கைது!

தூத்துக்குடியில் இணையதளத்தில் பகுதி நேர வேலை என்று வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி ரூபாய் 34 லட்சம் பணம் மோசடி செய்த வழக்கில் 4பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடியைச் சேர்ந்த கண்ணன் (41) என்பவரது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு இணையதளத்தில் பகுதி நேர வேலை வாய்ப்பு என்று செய்தி வந்துள்ளது. இதனையடுத்து கண்ணன் மேற்படி வாட்ஸ் ஆப் எண்ணை தொடர்பு கொண்டு அவர்களிடம்  பேசிய போது ரேட்டிங்ஸ் கொடுப்பதன் மூலம் பணம் கிடைக்கும் என்று கண்ணனிடம் கூறியுள்ளனர்.

இதனையடுத்து கண்ணன் அனுப்பிய லிங்க் மூலம் ரேட்டிங் செய்து முதலில் சிறிய தொகை பெற்றுள்ளார். பின்னர் மேற்படி மர்ம நபர்கள் நாங்கள் சொல்லும் கம்பெனிக்கு முதலீடு செய்து ரேட்டிங்ஸ் கொடுத்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி கண்ணனின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு லிங்க் அனுப்பி உள்ளனர். அதனை நம்பி கண்ணன் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது 2 வங்கி கணக்குகளில் இருந்து பல்வேறு தவணைகளாக  கூறிய 11 வங்கி கணக்குகளுக்கு மொத்தம் ரூபாய் 34,07,570/- பணத்தை அனுப்பி உள்ளார்.

பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்த கண்ணன் இதுகுறித்து NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார். கண்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எல். பாலாஜி சரவணன்  தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  உன்னிகிருஷ்ணன்  மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர்  ஜோஸ்லின் அருள் செல்வி தலைமையில் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து மோசடி செய்த எதிரிகளை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில்  தனிப்படை போலீசார் தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டதில் கண்ணனின் வங்கி கணக்குகளில் இருந்து கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த 7 வங்கி கணக்குகளுக்கு சுமார் 22,32,990/- பணம் மற்றும் மேலும் 3 வங்கி கணக்குகளுக்கு ரூபாய் 11 லட்சம் பணம் பெறப்பட்டிருந்ததும்,  அந்த வங்கி கணக்குகளின் உரிமையாளர்களான கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர்களான அப்புன்னி மகன் வினித் (33), மனோஜ் குமார் மகன் நிகில் குமார் (30), குஞ்சாலி மகன் அலாவி (39) ஆகியோர் என்பதும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த மலப்புரம் பகுதியைச் சேர்ந்த மொய்தீன்குட்டி மகன் ரியாஸ் (32) ஆகிய 4 பேரும் மேற்படி கண்ணனிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இதனையடுத்து மேற்படி தனிப்படை போலீசார் நேற்று (14.03.2024) கேரள மாநிலம் மலப்புரம் பகுதிக்குச் சென்று  மேற்படி எதிரிகள் 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு தூத்துக்குடி அழைத்து வரப்பட்டு இன்று (15.03.2024) தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். IVல் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையிலடைத்தனர்.

மேலும் இவ்வழக்கில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் மேற்படி எதிரிகளின் வங்கி கணக்குகளில் இருந்த ரூபாய் 9,17,785/- மோசடி பணத்தை Freeze செய்து நீதிமன்ற உத்தரவுப்படி மேற்படி Freeze செய்த பணத்தில் ரூபாய் 4,78,000/- பணத்தை கண்ணனின் வங்கி கணக்குக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மீதி பணத்தை மீட்க சைபர் குற்றப்பிரிவு போலீசார் சட்டரீதியாக தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வழக்கில் தனிப்படை போலீசார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு எதிரிகளை கண்டுபிடித்து கைது செய்து அவர்களிடமிருந்து பணத்தை மீட்டு நடவடிக்கை மேற்கொண்ட தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எல். பாலாஜி சரவணன்  பாராட்டினார்.