துணை முதல்வர் உதயநிதி! நாளை பொறுப்பேற்பு, செந்தில் பாலாஜியும் அமைச்சராகிறார்!!
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தமிழகத்தின் துணை முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார்.
தமிழகத்தில் 6 அமைச்சர்களின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், 3 பேர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தமிழகத்தின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். மேலும், அவருக்கு திட்டமிடல் மற்றும் வளர்ச்சித்துறை கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளது. மேலும், தமிழக அமைச்சரவையில் 6 பேரின் இலக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி தங்கம் தென்னரசு நிதி அமைச்சராகவும், சுற்றுச் சூழல்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார்.
உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, வனத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மெய்யநாதன் நியமனம். அந்த பதவியை வகித்த ராஜ கண்ணப்பன் பால்வளத்துறை அமைச்சராக மாற்றப்பட்டு உள்ளார்.
வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். அந்த பொறுப்பை வகித்து வந்த கயல்விழி செல்வராஜ் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று தமிழக அமைச்சரவையில் இருந்து அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ், கே.ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டு உள்ளனர். அதேவேளையில் புதிய அமைச்சர்கள் ஆக முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், மற்றும் கோவி.செழியன், ஆர். ராஜேந்திரன் ஆகியோர் பதவி ஏற்கின்றர். செந்தில் பாலாஜிக்கு அவர் பொறுப்பு வகித்த மின்துறை வழங்கப்படலாம் என தெரிகிறது. ஆவடி நாசருக்கு, சிறுபான்மையினர் நலத்துறை வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று தமிழக அமைச்சரவை மாற்றத்திற்கு ஆளுநர் ஆர்.என். ஒப்புதல் அளித்துள்ளார். புதிய அமைச்சரவை நாளை மாலை 3.30 மணிக்கு பதவி ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.