அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தினமும் செல்லும் பாலம்… இதுவரை கண்ணில் படவில்லையா?” – சீரமைக்கப்படாமல் கிடக்கும் மேம்பாலம்; டேவிஸ்புரம் மக்கள் வேதனை!

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தினமும் செல்லும் பாலம்… இதுவரை கண்ணில் படவில்லையா?” – சீரமைக்கப்படாமல் கிடக்கும் மேம்பாலம்; டேவிஸ்புரம் மக்கள் வேதனை!

தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட டேவிஸ்புரம் பகுதியில் இருந்து ECR சாலைக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள மேம்பாலம் நீண்ட நாட்களாக மோசமான நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

டேவிஸ்புரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தினசரி பயன்படுத்தி வரும் முக்கியமான இந்தப் பாலத்தில் பல இடங்களில் சாலை சேதமடைந்து காணப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக இரவு நேரங்களில் பாலத்தின் மோசமான நிலை காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்த வழியாக பல்வேறு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் சென்று வருவதாகவும், இருந்தபோதிலும் பாலத்தின் தற்போதைய மோசமான நிலை குறித்து இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் டேவிஸ்புரம் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

“மக்கள் தினமும் பயன்படுத்தும் முக்கியமான பாலம் இது. அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, விபத்து ஏற்படுவதற்கு முன்பாக பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும்” என்பதே அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக டேவிஸ்புரம் மேம்பாலத்தை நேரில் ஆய்வு செய்து, சேதமடைந்த பகுதிகளை சீரமைத்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.