தூத்துக்குடியில் வங்கி, ஏ.டி.எம் மையங்களில் திருட முயன்றவர் கைது!
தூத்துக்குடியில் வங்கி மற்றும் ஏ.டி.எம் மையங்களில் திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் கடந்த 27.03.2024 அன்று இரவு பிரையன்ட் நகர் பகுதியில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம் ல் உள்ள சிசிடிவி கேமரா, சென்சார் போன்றவற்றை உடைத்து மர்மநபர் திருட முயற்சித்துள்ளார்.அதேபோன்று கடந்த 28.03.2024 அன்று இரவு புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூட்டுடன்காடு பகுதியில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம் மற்றும் கோரம்பள்ளம் பகுதியில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம் லும் மர்ம நபர் கண்காணிப்பு கேமராவில் கருப்பு நிற மையை தெளித்து கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார்.
மேலும் கடந்த 22.04.2024 அன்று இரவு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிதம்பரநகர் பகுதியில் உள்ள ஒரு வங்கியின் பூட்டுகளை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க மர்ம நபர் முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர்கள் மற்றும் ஏடிஎம் சர்வீஸ் நிறுவன ஊழியர் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் மற்றும் புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இச்சம்பவங்கள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா மேற்பார்வையில் தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் செந்தில், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், காவலர் முத்துப்பாண்டி, தென்பாகம் காவல் நிலைய காவலர் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தூத்துக்குடி நகர உட்கோட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில், தூத்துக்குடி கோரம்பள்ளம் சோரீஸ்புரம் பகுதியைச் சேர்ந்த ஜேசுராஜ் மகன் காட்வின் ஜோஸ் (29) என்பவர் மேற்படி வங்கி மற்றும் ஏ.டி.எம் மையங்களில் திருட முயற்சி செய்தது தெரியவந்தது.உடனே மேற்படி போலீசார் காட்வின் ஜோஸை கைது செய்து, அவரிடமிருந்து திருடுவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் மற்றும் புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.