திருச்செந்தூர் கோவிலில் பவுர்ணமி வழிபாடு: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
பவுர்ணமி தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கூட்ட நெரிசல் காரணமாக தங்கத்தேர் பவனி ரத்து செய்யப்பட்டது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று பவுர்ணமி தினத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6.30 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. பின்னர் காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.
ஆண்டு முழுவதும் குறிப்பிட்ட சில நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் மாலையில் தங்க தேர் கிரிபிரகாரத்தில் பவனி வரும். இந்நிலையில் நேற்று பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகம் மற்றும் கடற்கரை பகுதியில் குவிந்தனர். இதையடுத்து கூட்ட நெரிசல் காரணமாக தங்கத்தேர் பவனி ரத்து செய்யப்பட்டது.
சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய தங்கத்தேர், நிற்கும் இடத்திலேயே அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தங்கத்தேர் இழுப்பதற்காக கட்டணம் செலுத்திய 19 குடும்பத்தினருக்கும் கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் அவர்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
பவுர்ணமி தினத்தை முன்னிட்டு இரவு, பகல் பாராமல் பக்தர்கள் குவிந்ததால் நகர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. டி.பி. ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வாகனம் நிறுத்தும் இடத்தில் பக்தர்கள் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. மேலும் கோவில் வளாகம் மற்றும் நகருக்குள் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இல்லாததால் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. போலீசார் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
-----------------------------------------------------------------
உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை தெரிந்துகொள்ள...
WHATSAPP GROUP LINK 1 :- CLICK HERE
WHATSAPP GROUP LINK 2 :- CLICK HERE