மேயர் பதவி திருப்தி” – அடுத்த அரசியல் இலக்கு என்ன? ஜெகன் பெரியசாமி உரை கவனம் ஈர்ப்பு

மேயர் பதவி திருப்தி” – அடுத்த அரசியல் இலக்கு என்ன? ஜெகன் பெரியசாமி உரை கவனம் ஈர்ப்பு

தூத்துக்குடி ஹோம் சயின்ஸ் கல்லூரியில் தமிழக முதல்வரின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு 83 மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.

மாணவிகளிடம் உரையாற்றிய மேயர் ஜெகன் பெரியசாமி, “இன்றைய உலகம் கடுமையான போட்டி நிறைந்தது. கணினி அறிவு இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள அறிவு இன்று நம் கைகளில் உள்ளது. பெற்றோர்கள் பல கனவுகளுடன் தங்கள் பிள்ளைகளை கல்வி கற்க அனுப்புகிறார்கள். அந்த கனவுகளை நனவாக்குவது மாணவர்களின் பொறுப்பு,” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “கல்வி என்பது மதிப்பெண் பெறுவதற்காக மட்டுமல்ல; அறிவை வளர்ப்பதற்கானது. உடல் ஆரோக்கியமும் அவசியம். மனதளவிலும் தைரியம் வேண்டும். தூத்துக்குடியில் பெண்களுக்கென மூன்று தனிப்பட்ட பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவிகள் தங்களை உடல், மன ரீதியாக வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்று அறிவுறுத்தினார்.

சுற்றுச்சூழல் குறித்து பேசிய அவர், “பிளாஸ்டிக் கேரி பேக்குகளை தவிர்க்க வேண்டும். மரங்கள் நட வேண்டும். சமூக பொறுப்புணர்வுடன் வாழ வேண்டும்,” என்றார்.

அரசியல் முக்கியத்துவம் பெறும் வகையில் அவர் கூறிய ஒரு வரி நிகழ்ச்சியில் கவனம் ஈர்த்தது. “எந்த பதவியில் இருப்பது முக்கியமல்ல; அந்தப் பதவியில் இருந்து எதை முன்னேற்றினோம் என்பதே முக்கியம். இந்த மேயர் பதவி எனக்கு திருப்தி அளிக்கிறது. அறிவு கடல் போன்றது. அதை பெற்று பலரை உருவாக்க வேண்டும். முடியாதது எதுவும் இல்லை; முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்,” என்று தெரிவித்தார்.

இந்த “மேயர் பதவி திருப்தி” குறித்த அவரது கருத்து அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. அவரது எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன.

முன்னதாக, “மடிக்கணினி கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று மேயர் கேட்டபோது, “ப்ராஜெக்ட் செய்வோம்” என்று மாணவிகள் உற்சாகமாக பதிலளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.