20 ஆண்டுகளாக இறந்த நபரின் பெயரில் போலி பாஸ்போர்ட்... வெளிநாட்டில் பதுங்கிய தூத்துக்குடி நபர் விமான நிலையத்தில் கைது!

20 ஆண்டுகளாக இறந்த நபரின் பெயரில் போலி பாஸ்போர்ட்... வெளிநாட்டில் பதுங்கிய தூத்துக்குடி நபர் விமான நிலையத்தில் கைது!

நெல்லை மாவட்டம் உவரி பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நபரின் பெயர் மற்றும் முகவரியை பயன்படுத்தி போலி பாஸ்போர்ட் பெற்று வெளிநாட்டில் வசித்து வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவரை, உவரி போலீசார் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து அதிரடியாக கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு மீனவர் காலனியைச் சேர்ந்த லாசரின் மகன் பனிச்செல்வின் (47) என்பவர், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை மாவட்டம் உவரி வடக்கு தெருவில் வசித்து வந்துள்ளார். அப்போது அவரது வீட்டின் அருகே வசித்த போரஸ் மகன் ஜார்ஜ் என்பவரின் முகவரி மற்றும் தனிப்பட்ட விவரங்களை பயன்படுத்தி, ஜார்ஜ் பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்ததாக கூறப்படுகிறது.

இந்த போலி ஆவணத்தின் மூலம் வெளிநாட்டிற்கு சென்ற பனிச்செல்வின், பல ஆண்டுகளாக அங்கு வசித்து வந்துள்ளார். இதற்கிடையில் உண்மையான பாஸ்போர்ட் உரிமையாளரான ஜார்ஜ் சில ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், வெளிநாட்டில் இருந்தபடியே தனது பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்காக பனிச்செல்வின் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். வழக்கமான பாஸ்போர்ட் சரிபார்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக உவரி போலீசார் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது பாஸ்போர்ட்டில் இருந்த புகைப்படத்தை அப்பகுதி மக்களிடம் காட்டி விசாரித்தபோது, அது இறந்துபோன ஜார்ஜின் பெயரில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் என்பதும், புகைப்படத்தில் இருப்பவர் உண்மையில் மணப்பாட்டைச் சேர்ந்த பனிச்செல்வின் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் ஜார்ஜின் அடையாளத்தை பயன்படுத்தி வெளிநாடு சென்றிருப்பதும் போலீசாரின் விசாரணையில் உறுதியானது.

இதையடுத்து பனிச்செல்வின் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த உவரி போலீசார், அவரை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து நேற்று கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்த பனிச்செல்வினை, உவரி காவல் ஆய்வாளர் பிரேமா தலைமையிலான போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பனிச்செல்வினிடம், போலி பாஸ்போர்ட் தயாரிப்பில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா, இதற்கு உதவிய நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம், பல ஆண்டுகளாக போலி அடையாளத்தில் வெளிநாட்டில் வசித்து வந்த நபர் ஒருவர் பாஸ்போர்ட் புதுப்பிப்பு முயற்சியால் சிக்கியுள்ள அதிர்ச்சிகரமான மோசடியாக பேசப்படுகிறது.