நீம் பவுண்டேசன் சார்பில் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தாளாளர் - தலைமையாசிரியர்கள் கூட்டம்..!

நீம் பவுண்டேசன் சார்பில் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தாளாளர் - தலைமையாசிரியர்கள் கூட்டம்..!

தூத்துக்குடி மாவட்டத்தில் மெல்லக் கற்கும் மாணவர்களின் நிலை மற்றும் வளர்ச்சி குறித்து அரசு உதவி பெறும் பள்ளிகளின் தாளாளர் மற்றும் தலைமையாசிரியர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நீம் பவுண்டேசன் சார்பில் தூத்துக்குடியில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கல்விப் பணி செய்து வரும் நீம் பவுண்டேசன், அரசு உதவி பெறும் பள்ளிகளில்  எழுத்துகள் வாசிக்க - எழுத தெரியாத காரணத்தினால் எந்தவொரு குழந்தையும் பள்ளியிலிருந்து வெளியேறி விட கூடாது என்னும் உயரிய நோக்கத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

கடந்த திசம்பர் மாதத்தில் அரையாண்டுத் தேர்வு நிறைவுற்ற நிலையில் 2022 - 2023 ம் கல்வியாண்டின் நிறைவில் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் மெல்லக் கற்கும் மாணவர்களது பங்கும் உறுதியாக்கப்பட வேண்டும் என்பதற்காக தாளாளர் மற்றும் தலைமையாசிரியர்களுடனான திட்டமிடல் கூட்டத்தை நீம் பவுண்டேசன் நடத்தியது. இந்நிகழ்வில் நீம் திட்ட இயக்குநர் நிமிஷா அனைவரையும் வரவேற்று கூட்டத்தின் நோக்கம் குறித்து விவரித்துப் பேசினார்.

தொடர்ந்து கீழ முடிமன் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் விக்டர் கடந்த ஐந்து மாதங்களில் நீம் பவுண்டேசன் தங்கள் பள்ளியில் செய்த பணிகளை குறித்து வாழ்த்தி பேசினார். பின்னர் நீம் பவுண்டேசன் கௌரவ ஆலோசகர் எரோனிமஸ் நீம் பவுண்டேசன் நோக்கங்கள் மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களின் வளர்ச்சிக்கான எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்.

தொடர்ந்து அனைத்து பங்கேற்பாளர்களும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். நீம் பவுண்டேசன் நிறுவனர் லூயிஸ் நன்றியுரை கூறினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை நீம் தன்னார்வலர்கள் அருண்குமார், வினோத், சங்கர் மற்றும் பணியாளர்கள் பொன் இந்திரா, ஐஸ்வர்யா, சரண்யா, சிந்தியா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.