நீட் தேர்வால் தூத்துக்குடி மாணவர்கள் கடும் பாதிப்பு : தனி கட் ஆப் வைக்க கோரிக்கை!

நீட் தேர்வால் தூத்துக்குடி மாணவர்கள் கடும் பாதிப்பு : தனி கட் ஆப் வைக்க கோரிக்கை!

2024 நீட் தேர்வில் இந்தியா முழுவதும் எளிதான வினாத்தாள் அளிக்கப்பட்டு, தூத்துக்குடியில் மட்டும் கடினமான வினாத்தாள் அளிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவ மாணவிகள் முற்றுகையிட்டனர். 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவ, மாணவிகள் அளித்துள்ள மனுவில், "2024 நீட் தேர்வில் இந்தியா முழுமைக்கும் இதுவரை இல்லாத வகையில் மிக மிக எளிய QRST வரிசை எண் கொண்ட வினாத்தாள் மூலம் நீட் தேர்வு 2024ல் நடந்த நிலையில் எங்களுக்கு மட்டும் மிக மிக கடினமான MNOP வரிசை எண் தெரிய வினாத்தாள் வழங்கப்பட்டது. இதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இது தொடர்பாக நாங்கள் முறையிட்டும் இதுவரை தேசிய தேர்வு முகமையால் எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.

தூத்துக்குடி அழகர் பப்ளிக் ஸ்கூல் தேர்வு மையத்தில் நீட் தேர்வை எழுதிய நாங்கள் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாலும், விடையளிக்க அதிக நேரம் செலவானதினாலும் எங்களால் அதிக மதிப்பெண் பெற இயலாமற் போய்விட்டது. எங்களது எதிர்காலமே எங்கள் கண்முன் இருண்டு காணப்படுகிறது. மிகுந்த மன உளச்சலுக்கு ஆளாகி உள்ளோம். எங்களோடு நீட் தேர்ச்சி பெறுவதற்கு பணம் செலவு செய்து முன் முயற்சிகளை எடுத்து உழைத்த எங்களது பெற்றோர்களும் கண்ணீர் வடித்து நிற்கின்றனர். 

எங்களது மருத்துவர் கனவு கனவாகவே போய்விடுமோ? என்ற ஏக்கம் எங்களை வாட்டி வதைக்கிறது. எனவே, QRST மாடல் டைப் வினாத் தாள்களுக்கு தனி கலந்தாய்வு, தனிக் கட்ஆப் மார்க்கும், MNOP மாடல் வினாத்தாள்களுக்கு தனி கலந்தாய்வு தனி கட்ஆப் மார்க் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.