தூத்துக்குடி தெப்பக்குளம் சீரமைப்புப் பணிகள் தீவிரம்... தை மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்..!

தூத்துக்குடி தெப்பக்குளம் சீரமைப்புப் பணிகள் தீவிரம்... தை மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்..!

தூத்துக்குடி மாநகரின் ஆன்மீக அடையாளங்களில் ஒன்றான நூற்றாண்டு பழமையான தெப்பக்குளம், பழமை மாறாமல் நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் தை மாதத்திற்குள் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் கோவில், வைகுண்டபதி பெருமாள் கோவில், மாரியம்மன் கோவில், முத்தாரம்மன் கோவில், மேலூர் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளிட்ட ஆன்மீகத் தலங்களை உள்ளடக்கிய பகுதியில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த தெப்பக்குளம் உருவாக்கப்பட்டது. இங்கு ஆண்டுதோறும் தை மாதத்தில் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் தெப்பக்குளத்தைச் சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டபோது எதிர்பாராத விதமாக அதன் கட்டமைப்பில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பழமையின் தன்மை மாறாமல் நவீன வசதிகளுடன் தெப்பக்குளம் புதுப்பிக்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி உறுதியளித்திருந்தார்.

அதன்படி, மாநகராட்சி சார்பில் ரூ.50 லட்சத்திற்கும் மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சீரமைப்புப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று டார்ச் லைட் உதவியுடன் ஆய்வு செய்து, நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து பார்வையிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தெப்பக்குளத்தின் தென்புறத்தில் மின்சார வாரியம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த மின்மாற்றி மற்றும் இரண்டு மின்கம்பங்கள் பொதுமக்களுக்கும், தெப்பத் திருவிழாவின்போது பக்தர்கள் விழாவைக் கண்டு ரசிப்பதற்கும் இடையூறாக இருந்தன. மாநகராட்சி நிர்வாகத்தின் தொடர் நடவடிக்கைகளால் அவை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

தற்போது தெப்பக்குளம் பழமை மாறாமல் நவீன முறையில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இயற்கையான நீர்வீழ்ச்சியைப் போன்ற தோற்றத்தில் செயற்கை நீர்வீழ்ச்சி அமைக்கப்பட உள்ளது. இரவு நேரத்தையும் பகல் பொழுதுபோல் மாற்றும் வகையில் வண்ண மின்விளக்குகள் பொருத்தப்பட உள்ளன.

பொதுமக்கள் அமர்ந்து ஓய்வெடுக்கும் வகையில் அழகிய இயற்கைச் சூழலுடன் கூடிய வசதிகளும், சிறுவர் சிறுமியர் பொழுதுபோக்கும் வகையில் சிறிய ஊஞ்சல்கள் மற்றும் சறுக்குகள் உள்ளிட்ட விளையாட்டு வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.

இதுவரை தெப்பத் திருவிழாவின்போது மட்டுமே பொதுமக்கள் அதிகளவில் வந்து பார்வையிடும் இடமாக இருந்த தெப்பக்குளம், இனி ஆண்டின் 365 நாட்களும் மக்கள் வந்து கண்டு ரசிக்கும் வகையில் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டு வருகிறது. பணிகள் தை மாதத்திற்குள் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

இவ்வாறு மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.