விசாரணை கைதிகளின் பற்களை கல்லால் உடைத்து, அந்தரங்க உறுப்பை நசுக்கிய விவகாரம்: ஏஎஸ்பி மீது விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு!!
அம்பையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய குற்றச்சாட்டு தொடர்பாக உதவி காவல் கண்காணிப்பாளர் மீது விசாரணை நடத்த நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
அம்பையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய குற்றச்சாட்டு தொடர்பாக உதவி காவல் கண்காணிப்பாளர் மீது விசாரணை நடத்த நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்களை விசாரிக்கும் போது பற்களை பிடுங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிறு சிறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்படும் நபர்களிடம் அத்துமீறுவதாக ஏ.எஸ்.பி பல்பீர் சிங் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கியும், அந்தரங்க உறுப்பை நசுக்கியும் கொடுமைப்படுத்துவதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் ஐபிஎஸ் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் பல்வீர் சிங். 2020 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான பல்வீர் சிங் அம்பாசமுத்திரத்தில் கடந்தாண்டு ஆகஸ்ட் முதல் ஏ.எஸ்.பியாக பணியாற்றி வருகிறார். இவர் அங்கு பொறுப்பேற்ற பிறகு அம்பாசமுத்திரம் பகுதியில் சிறிய குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவரது பற்களை பிடுங்கித் துன்புறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒரு தகராறில் ஈடுபட்ட வழக்கில், செல்லப்பா, மாரியப்பன் உள்ளிட்ட சில இளைஞர்களை போலீசார் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு செல்லப்பா உள்ளிட்டவர்களை 2 காவலர்கள் கையைப் பிடித்துக்கொள்ள, ஏ.எஸ்.பி பல்வீர் சிங் ஜல்லிக்கற்களைக் கொண்டு பல்லைத் தட்டித் தட்டி உடைத்ததாகவும், ரத்தம் சொட்டச் சொட்ட வாயில் ஜல்லிக் கல்லைத் திணித்து முகத்தில் கடுமையாகத் தாக்கியதாக செல்லப்பா குற்றம்சாட்டியுள்ளார். 8 பேரின் பற்களை உடைத்து கடுமையாக தாக்கியதாகவும் ஏ.எஸ்.பி பல்வீர் சிங் மீது அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், செல்லப்பாவின் சகோதரரான புதிதாக திருமணமான மாரியப்பன் என்பவரின் அந்தரங்க உறுப்பில் இடது கையால் கடுமையாகப் பிடித்து நசுக்கியதோடு, ஷூ காலை வைத்து நெஞ்சில் ஏறி மிதித்து, கொடுமை செய்ததில், அவர் தற்போது எழக்கூட முடியாமல் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செல்லப்பா வேதனையோடு தெரிவித்துள்ளார். மேலும், போலீசார் அடித்ததாக கோர்ட்டில் சொல்லக்கூடாது, பைக்கில் இருந்து விழுந்துவிட்டோம், மரத்தில் இருந்து விழுந்துவிட்டோம் எனச் சொல்ல வேண்டும் என மிரட்டியதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டு உள்ளார். இதற்கான விசாரணை அதிகாரியாக சேரன்மாதேவி உதவி ஆட்சியர் முகமதுசபீர் ஆலமை நியமித்து உள்ளார்.
இதற்கிடையே சமூக அமைப்பை சேர்ந்த நிர்வாகி ஒருவர், உதவி காவல் கண்காணிப்பாளர் பல்பீர் சிங்கிடம் தொலைபேசியில், பற்களை பிடுங்கியது தொடர்பாக விளக்கம் கேட்ட உரையாடல் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.