பணத்தகராறில் தூத்துக்குடி பிரபல ரவுடி வெட்டிக்கொலை! கூடங்குளம் அருகே பரபரப்பு – கணவன், மனைவி கைது

பணத்தகராறில் தூத்துக்குடி பிரபல ரவுடி வெட்டிக்கொலை! கூடங்குளம் அருகே பரபரப்பு – கணவன், மனைவி கைது

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே தோட்டத்தில் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படும் பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது கூட்டாளி மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தாமரைக்குளத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் செல்வம் (46). இவர் மீது கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை உள்ளிட்ட பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

செல்வத்திற்குச் சொந்தமான தோட்டம் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகேயுள்ள சங்கனேரி கிராமத்தில் அமைந்துள்ளது. சம்பவத்தன்று தனது தோட்டத்திற்குச் சென்ற செல்வத்தை மர்ம நபர்கள் சிலர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். காவல் ஆய்வாளர் நவீன் உத்தரவின்பேரில், உதவி ஆய்வாளர் வினோத்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளைத் தேடும் பணி நடைபெற்றது.

தனிப்படை போலீசாரின் தீவிர விசாரணையில், செல்வத்தின் கூட்டாளியான பொட்டல்குளத்தைச் சேர்ந்த சந்துரு (26) மற்றும் அவரது மனைவி கவுரி ஆகியோருக்கு கொலை சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

போலீசார் நடத்திய விசாரணையில், செல்வமும் சந்துருவும் இணைந்து குளம் ஒன்றைக் குத்தகைக்கு எடுத்து அதில் தாமரைப் பூக்களை வளர்த்து விற்பனை செய்து வந்ததாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் மற்றொரு குளத்தை குத்தகைக்கு எடுத்தது தொடர்பாக இருவருக்கும் இடையே பணக் கொடுக்கல்–வாங்கல் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் செல்வத்திற்கும் சந்துருவுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்த முன்விரோதத்தின் காரணமாக சந்துருவும் அவரது மனைவி கவுரியும் இணைந்து செல்வத்தை வெட்டிக் கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து சந்துரு மற்றும் கவுரி ஆகிய இருவரையும் கூடங்குளம் போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கூடங்குளம் அருகே தூத்துக்குடி பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பணத்தகராறு காரணமாக கூட்டாளியே மனைவியுடன் சேர்ந்து கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.