மொட்டை முதல் தண்ணீர் பாட்டில் வரை கூடுதல் கட்டணம்? இருக்கன்குடி கோவிலில் அமைச்சர் அதிரடி ஆய்வு நடத்த கோரிக்கை!

மொட்டை முதல் தண்ணீர் பாட்டில் வரை கூடுதல் கட்டணம்?   இருக்கன்குடி கோவிலில் அமைச்சர் அதிரடி ஆய்வு நடத்த கோரிக்கை!

விருதுநகர் மாவட்டத்தின் புகழ்பெற்ற இருக்கன்குடி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் பக்தர்களிடமிருந்து பல்வேறு கட்டாய வசூல்கள் நடைபெறுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருக்கோவில் நிர்வாகம் சார்பில் மொட்டை போடுவது இலவசமாக வழங்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், மொட்டை போடும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள், கோவிலுக்கு வரும் பொதுமக்களிடம் கட்டாயமாக ஒரு மொட்டைக்கு ரூ.100 வீதம் வசூலித்து வருவதாக பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அதேபோல், காதுகுத்தும் சேவைக்காக கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.50 டோக்கன் வழங்கப்பட்டாலும், காதுகுத்தும் பணியில் ஈடுபடும் நபர்கள் கூடுதலாக சுமார் ரூ.200 வரை வசூலிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இதுமட்டுமின்றி, கோவில் வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள், அரசு நிர்ணயித்த எம்ஆர்பி (MRP) விலையை விட அதிகமாக விற்பனை செய்யப்படுவதாகவும் பக்தர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில், இத்தகைய கட்டாய வசூல்கள் மற்றும் கூடுதல் விற்பனைகள் பொதுமக்களை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உடனடியாக இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நேரடி ஆய்வு மேற்கொண்டு, முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த புகார்கள் குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவார்களா? அல்லது பக்தர்களின் வேதனை தொடருமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.