சிவப்பு-நீல லைட் வைத்தீர்களா? - ஒரே நாளில் 38 வாகனங்கள் சிக்கியது: தூத்துக்குடி போலீஸ் அதிரடி!

சிவப்பு-நீல லைட் வைத்தீர்களா? - ஒரே நாளில் 38 வாகனங்கள் சிக்கியது: தூத்துக்குடி போலீஸ் அதிரடி!

தூத்துக்குடி மாவட்டத்தில் சிவப்பு-நீல ஸ்ட்ரோப் விளக்குகளை சட்டவிரோதமாக பயன்படுத்திய தனியார் வாகனங்களுக்கு எதிராக காவல்துறை இன்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் அவர்களின் உத்தரவின்படி நடைபெற்ற தீவிர வாகன சோதனையில், ஒரே நாளில் பேருந்து, கார், லாரி மற்றும் மினி சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட 38 வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த ஸ்ட்ரோப் விளக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவசர சேவைகளான ஆம்புலன்ஸ், காவல்துறை மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள இந்த சிவப்பு-நீல விளக்குகளை தனியார் வாகனங்களில் பயன்படுத்துவது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. இதனால் பொதுமக்கள் உண்மையான அவசர வாகனங்களை அடையாளம் காண முடியாமல் குழப்பம் ஏற்படும் அபாயமும் உள்ளது.

மேலும், இத்தகைய செயல்கள் அவசர சேவைகளின் முக்கியத்துவத்தையும் குறைக்கும் என்பதால், இனிமேல் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஸ்ட்ரோப் விளக்குகளை உடனடியாக அகற்றுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.