தூத்துக்குடியில் தனியார் பல்கலைக்கழக திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு – நகல் எரிப்பு போராட்டம்

தூத்துக்குடியில் தனியார் பல்கலைக்கழக திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு – நகல் எரிப்பு போராட்டம்

தமிழகத்தில் உயர்கல்வியை தனியார் மயமாக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தனியார் பல்கலைக்கழக திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி, தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

தமிழக சட்டமன்றத்தின் கடைசி நாள் கூட்டத்தில் தனியார் பல்கலைக்கழக திருத்த மசோதா அவசரகதியில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறி, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, இந்திய மாணவர் சங்கம் சார்பில் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்  ராம்குமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது தமிழக அரசையும், தனியார் பல்கலைக்கழக திருத்த மசோதாவையும் கண்டித்து மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, மசோதாவின் நகல்களை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

உயர்கல்வியை தனியாரிடம் ஒப்படைக்கும் வகையில் உள்ளதாகக் கூறப்படும் இந்த சட்ட மசோதாவை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் தொடர்ந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.