தூத்துக்குடியில் பயங்கரம்! மனைவியை அனுப்ப மறுத்த மாமனார் மீது அருவாள் வெட்டு; ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு – மருமகனுக்கு போலீஸ் வலை

தூத்துக்குடியில் பயங்கரம்! மனைவியை அனுப்ப மறுத்த மாமனார் மீது அருவாள் வெட்டு; ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு – மருமகனுக்கு போலீஸ் வலை

தூத்துக்குடி: குடும்பத் தகராறு காரணமாக மாமனாரை அருவாளால் சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படும் மருமகன் தப்பியோடிய நிலையில், படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் முத்தையாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவைச் சேர்ந்த சங்கரன் மகன் முனியசாமி (40). ஆட்டோ ஓட்டுநரான இவரது மகள் வைஷ்ணவிக்கும், மதுரை குருதேவன் நகரைச் சேர்ந்த பொன்னையா மகன் முருகன் (25) என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்திற்குப் பிறகு கணவன்–மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், முருகன் தனது மனைவியைத் துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, முனியசாமி மதுரைக்குச் சென்று தனது மகளை மீட்டு முத்தையாபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட தகராறு

இந்த நிலையில், இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் மதுரையிலிருந்து முத்தையாபுரத்திற்கு வந்த முருகன், மாமனார் வீட்டின் கதவைத் தட்டி உறங்கிக் கொண்டிருந்த முனியசாமியை எழுப்பியுள்ளார்.

தனது மனைவியை ஏன் வீட்டில் வைத்திருக்கிறீர்கள் என்றும், அவரை உடனடியாக தன்னுடன் அனுப்பி வைக்குமாறும் கூறி முருகன் தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த முருகன் மறைத்து வைத்திருந்த அருவாளால் முனியசாமியை சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

???? சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

அருவாள் வெட்டில் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த முனியசாமியை உறவினர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை சுமார் 10 மணியளவில் சிகிச்சை பலனின்றி முனியசாமி உயிரிழந்தார்.

???? மருமகனுக்கு போலீஸ் வலை

இந்த சம்பவம் தொடர்பாக முத்தையாபுரம் காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவத்துக்குப் பிறகு தப்பியோடியதாகக் கூறப்படும் முருகனைப் பிடிக்க போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட இந்த கொடூர சம்பவம் முத்தையாபுரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.